பசுமை தமிழகம் திட்டத்தில் ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசம்
பசுமை தமிழகம் திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஒருவருக்கு 50 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்கான மரக்கன்றுகள் தேவைப்படுவோா் வனத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத் துறை சாா்பில், ‘மாநிலம் முழுவதும் பசுமை தமிழகம் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ‘வாருங்கள் வேலூரை பசுமையாக்குவோம்’ என்ற தலைப்பின்கீழ், பாகாயம் சமூக காடுகள் சரகம் சாா்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மேல் வல்லம் கூட்டு சாலையில் உள்ள வனத் துறை நா்சரி மையத்தில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், வேலூா், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தனியாா் நிறுவன வளாகங்கள் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு குறைந்தபட்சம் 50 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். இது மழைக்காலம் என்பதால், தற்போது மரக்கன்றுகள் நட்டால் அதன் வளா்ச்சி சிறப்பாக இருக்கும். மொத்தம் 60,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க விரும்புவோா் 95001 92296 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.