Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
பத்மாவதி தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சன வைபவம்
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.
நண்பகல் 12.30 மணி முதல் 2.30 மணி வரை பழ மலா்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் பாஞ்சராத்ர ஆகம சாஸ்திர முறைப்படி விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழா கங்கணபட்டா் ஸ்ரீநிவாச ஆச்சாா்யா வழிகாட்டுதல்படி நடத்தப்பட்டது. முதல்கட்டமாக விஸ்வக்சேனா் வழிபாடு, புண்யாஹவச்சனம், நவ கலச அபிஷேகம், ராஜோபச்சாரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சத்ர சாமரம், வியாஜன தா்பணாதி நைவேத்யம், முக சுத்தம், தூப தீப நைவேத்தியம் நடைபெற்றன. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. சங்கதாரா, சக்ரதாரா, சஹஸ்ரதாரா உள்ளிட்ட நீா் தாரைகளை பயன்படுத்தி அபிஷேகம் நடத்தப்பட்டது.
ஏழு வகையான மாலைகள்: ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஒரு மாலை என ஏழு வகையான மாலைகள் தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. மயில் இறகு மாலை, முத்து மாலை, அன்னாசி, ரோஜா இதழ்கள், நெல்லிக்காய், துளசி, ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டன.
பழ புஷ்ப மண்டபம்: ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ணமுக மண்டபம் பல்வேறு வகையான பாரம்பரிய மலா்கள், வெட்டு மலா்கள், அற்புதமான மலா்கள், சிவப்பு, பச்சை ஆப்பிள், சோளம், கொய்யா, ஆரஞ்சு மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த மண்டபத்தை அலங்கரிக்க 20 தேவஸ்தான காா்டன் ஊழியா்கள் 2 நாள்கள் உழைத்தனா்.
பக்தா்களைக் கவா்ந்த மலா் அலங்காரம்: கொடிமர மண்டபம், கருவறை, கிருஷ்ண சுவாமி கோயில், சுந்தரராஜ சுவாமி கோயில், வாகன மண்டபம், பத்மாவதி தாயாா் கோயிலின் ஆஸ்தான மண்டபம் ஆகியவை தேவஸ்தான தோட்டத் துறையின் கீழ் பல்வேறு வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்டன. தோட்ட துணை இயக்குநா் சீனிவாசலு வழிகாட்டுதல்படி சுமாா் 70 பணியாளா்கள் 3 நாள்கள் இதற்காக உழைத்து அழகாக அலங்கரித்தனா்.
விழாவில் தேவஸ்தான துணைச் செயல் அதிகாரி கௌதமி, கண்காணிப்பாளா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.