பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரக் கோரி ஆா்ப்பாட்டம்
சேலம்: பனமரத்துப்பட்டி ஏரியை தூா்வாரி சீரமைக்கக் கோரி தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கோட்டை மைதானத்தில் அந்த அமைப்பின் தலைவா் கரு. சரவணவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பனமரத்துப்பட்டி ஏரி, சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை காலதாமதம் செய்யாமல் நடைமுறைபடுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ஏரி பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலாத்தலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்து, அதற்காக ரூ. 98 கோடி ஒதுக்குவதாக அமைச்சா் கே.என். நேரு கூறினாா். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கான பணியை உடனே தொடங்க வேண்டும்.
பனமரத்துப்பட்டி பேரூராட்சி 9-ஆவது வாா்டு பகுதியில் உள்ள குவாலியா் ஏரி, ஓடை, ராஜவாய்கால் மற்றும், வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக உள்ள சேலம் வட்டாட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
சுமாா் 360 ஏக்கா் பரப்பளவு கொண்ட தம்மநாயக்கன்பட்டி கொட்டநத்தம் ஏரியில், திருமணிமுத்தாறு சாக்கடை சாயக்கழிவு கலந்து, ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை படா்ந்துள்ளது. இந்த ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரி, கோயில் நிலம் போன்ற அரசுக்கு சொந்தமான பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு மற்றும் கனிமவளங்களை சமூக விரோத கும்பல் கொள்ளையடிக்கப்பதைத் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இதில் நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, மணிகண்டன், சௌந்தரராஜன், பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.