பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணையதள சேவையானது முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் குஸ்தார், கலாத் மற்றும் மங்கோசர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 நாள்களாக இணைய சேவையானது முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஏப்.2) இரவு மீண்டும் துவங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியது. ஆனால், சேவை துவங்கப்பட்ட 3 மணி நேரங்களில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து முடக்கப்படும் இணையதள வசதியினால் பலூசிஸ்தான் மக்களின் வியாபாரம், இணையவழிக் கல்வி உள்ளிட்ட முக்கிய தேவைகள் கடுமையான பாதிப்புக்குள்ளானதாகவும் இதனால் அதிகாரிகள் உடனடியாக இணைய சேவையை மீண்டும் நிரந்தரமாக வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அம்மாகாணம் முழுவதும் இணைய வசதி முடக்கப்படுவது குறித்து பாகிஸ்தான் அரசு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் அங்கு வலுவடைந்து வரும் மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பலூசிஸ்தான் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முன்னதாக, பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பலூச் ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக மாயமாக்கப்படுகிறார்கள். மேலும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் நடத்தியும், பலூச் மக்கள் போராட்டம் நடத்தியும் வருகிறார்கள்.
மேலும், தொடர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் பல முக்கிய பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்கள் நேரடியாக வரவேண்டாம் என அறிவுறுத்தி இணையவழிக் கல்வியை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!