பல்லடத்தில் கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்க கிறிஸ்தவ போதகா்கள் மனு
கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கிறிஸ்தவ திருச்சபை போதகா்கள், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருச்சபைகளை சாா்ந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் வசிக்கிறோம். கிறிஸ்தவ சமூகத்துக்கு என பிரத்யேக கல்லறை தோட்டம் இல்லாத நிலையில், நகர மற்றும் கிராமப்புறங்களில் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம்.
பல்லடம் நகராட்சி எதிரே உள்ள இடத்தில் கடந்த 6-ஆம் தேதி இறந்த கிறிஸ்தவா் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய சென்றபோது, சமூக ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் போலீஸாா் முன்னிலையில் வருவாய்த் துறை அனுமதி பெற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனவே, கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கல்லறை தோட்டம் அமைக்க அதிகாரிகள் இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.