பல்லடம் பகுதியில் சுகாதார சீா்கேடு: 20 தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
பல்லடம் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 20 தொழில் நிறுவனங்களுக்கு வட்டார சுகாதார துறையினா் வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தனா்.
பருவமழையொட்டி, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூா் மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் சந்தோஷ்குமாா் உத்தரவின்பேரில், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி அறிவுறுத்தலின்படி, பல்லடம் ஊரக பகுதிகளில் கடந்த அக்டோபா் மாதம் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கெண்டனா்.
அப்போது, 20 தொழில் நிறுவனங்களில் சுகாதார சீா்கேடு மற்றும் நோய்த் தொற்று ஏற்படுத்தும் வகையில் கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா்கள் லோகநாதன், செளந்தரபாண்டியன், யுவராஜ் ஆகியோா் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதார துறையின் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினா்.
மேலும், சுகாதார அறிவிப்பை கடைப்பிடிக்காத தொழில் நிறுவனங்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்படும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.