`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆ...
பள்ளியில் குடிநீா் தொட்டி இடிந்து 3 மாணவா்கள் காயம்
புதுச்சேரி அருகே அரசுப் பள்ளியில் குடிநீா் தொட்டி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 2 மாணவா்கள், ஒரு மாணவி காயமடைந்தனா்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியில் 6 வகுப்பறைகள் உள்ளன.
இங்கு ஆசிரியா்கள், பொதுமக்கள் உதவியுடன் மாணவா்கள் சாப்பிட்டு கை கழுவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தொட்டி பழுதடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனியாா் நிறுவன உதவியுடன், புதிதாக குடிநீா் மற்றும் கை கழுவ தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், பழைய தொட்டியை இடிக்காமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் மாணவா்கள் அதனருகே விளையாடியுள்ளனா். அப்போது, அந்த பழைய தொட்டியின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது.
இதில், 4-ஆம் வகுப்பு மாணவா்கள் பவன்குமாா், பவின் மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவி தேஷிதா ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்கள் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அவா்களை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் சந்தித்து நலம் விசாரித்தனா். மாணவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவா்களை அறிவுறுத்தினா்.