சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மறியல்
கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்கக் கோரி, நெட்டப்பாக்கத்தில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே உள்ளது நெட்டப்பாக்கம் மற்றும் தவளக்குப்பம். இரு பகுதிகளுக்கு இடையேயுள்ள பிரதான சாலை அருகே நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் பகுதி கழிவு நீா் வாய்க்கால் உள்ளது.
இந்த வாய்க்கால் புதா் மண்டியும், பழுதடைந்தும் உள்ளதால் கழிவு நீா் செல்லாமல் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனா். இதுகுறித்து, பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெட்டப்பாக்கம், தவளக்குப்பம் சாலையில் பொதுமக்கள் ஏராளமானா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மரக்கிளைகளையும் சாலையின் குறுக்கே வைத்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நெட்டப்பாக்கம் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசினா். கழிவுநீரை தடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.