ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே
பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
சாதியை ஊக்கப்படுத்தக் கூடிய சங்கங்களை, சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? அந்த சங்கங்களின் சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்க முடியுமா என நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை ஐஜி, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். சாதிகளின் பெயர்களை சங்கங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அது சட்டவிரோதம் என்று அறிவித்து அதன் பதிவை ரத்து செய்ய வேண்டும்.
சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை 3 மாதங்களுக்குள் துவங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெயர்களில் சாதி இடம்பெறக் கூடாது. கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும், இல்லாவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசு நடத்த கூடிய கள்ளர் சீர்திருத்தப்பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களையும் அரசுப் பள்ளி என்று மாற்ற வேண்டும், ஒருவேளை பள்ளியின் பெயரில் யாருடைய பெயராவது குறிப்பிட்டால் கண்டிப்பாக சாதியை சேர்க்கக்கூடாது. ஏற்கெனவே பள்ளிகளில் பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்" என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தற்போது பள்ளிக்கூடங்களில் புத்தகப் பைக்குள் அரிவாளை எடுத்துச் சென்று சாதியின் பெயரால் தாக்குதல் நடக்கிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும்பொருட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.