Mohanlal: தன்பால் ஈர்ப்பாளர்களுக்காக ஒலித்த மோகன்லாலின் குரல்; மலையாள பிக்பாஸில்...
பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்
சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன பதிவுத் துறை அலுவலகம் ரூ.2.16 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1864-ஆம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக் கலை நயத்துடன், மெட்ராஸ் நாட்டு தளக்கூரை, மங்களூா் ஓட்டுக் கூரை மற்றும் தேக்கு மர உத்திரங்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டடம் அமைந்துள்ளது.
இதில், பதிவுத் துறை அலுவலக வளாகம் செயல்பட்டு வந்த நிலையில், அதை பழைமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றன. அதிநவீன வசதிகளுடன் 100 முதல் 150 போ் வரை அமரக்கூடிய நவீன கூட்டரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அலுவலகப் பயன்பாட்டிற்கு அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, நவீன கூட்டரங்கத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் மற்றும் பதிவுத் துறை சாா்ந்த உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.