அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 173 மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை மொத்தம் ரூ. 4.46 லட்சத்தை வழங்கினர்.
அப்போது நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் செல்ல வேண்டுமென்பதே முதலமைச்சரின் நோக்கமாகும். அவருடைய மகத்தான திட்டம் “அன்புக்கரங்கள்“ ஆகும்.
தமிழக சட்டசபையில், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில், ஆழ்ந்து, சிந்தித்து உருவாக்கிய திட்டம்தான் அன்புக் கரங்கள்.
இளம் வயதில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தால், உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். கல்வியும் தடைபட்டு விடும்.

அந்த விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களின் வெற்றிடத்தை நிரப்பி, தொடர்ந்து கல்வியைக் கற்க ஊக்குவிக்கும் விதமாக நான் இருக்கிறேன். எனது கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் எனத் தனது அன்புக் கரங்களை தமிழக முதல்வர் நீட்டியுள்ளார். அவர்களுக்குத் தாயுமாகவும், தந்தையுமாகவும் நமது முதல்வர் இருந்து வருகிறார்.
எனவே, அவர்கள் கல்வியைத் தொடர்ந்திட மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தைத் துவக்கியுள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறி விடக் கூடாது என்பதற்காகவும், எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களது மன அழுத்தத்தை, துயரத்தைப் போக்கிடும் வகையில் இத்திட்டம் உள்ளது“ எனத் தெரிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், "நாம் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம். நமது தாய், தந்தையர் விட்டு விட்டு சென்றுவிட்டனர் என மனதளவில் மிகப் பெரிய பாதிப்பைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், நமது முதல்வர், நான் இருக்கிறேன் எனத் தனது அன்புக் கரங்களை நீட்டியுள்ளார்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரமும், இந்தியாவிலேயே நமது முதலமைச்சர் தான் இத்தகைய மகத்தான திட்டத்தைத் துவக்கியுள்ளார். அதற்குக் காரணம், நமது மாநிலம் கல்வியிலே சிறந்த மாநிலமாக இருக்கிறது. வறுமையினால் அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி இல்லாமல் போய் விடக் கூடாது.
அந்தக் குழந்தைகளின் திறமையெல்லாம் வெளிக் கொணர வேண்டும். அறிவார்ந்த, செயல்திறன் வாய்ந்த குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக இம்மாதிரியான திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.