BMW கார் விபத்து வழக்கில் கைதான பெண், திகார் சிறையில் அடைப்பு; நடந்தது விபத்தா, ...
Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, அதிகபட்சமாக எத்தனை ஸ்டென்ட்வரை பொருத்தலாம்?
Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், அதிகபட்சம் எத்தனை ஸ்டென்ட் வரை பொருத்திக் கொள்ளலாம். ஸ்டென்ட் பொருத்திக் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஆபத்து இல்லை என அர்த்தமா, அவர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது, சில அடைப்புகளை ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்டிங் சிகிச்சைகள் மூலம் சரிசெய்ய முடியும்.
ரத்தக்குழாய்களின் அளவு மற்றும் அவற்றில் ஏற்பட்ட அடைப்பின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து ஸ்டென்ட் பொருத்தப்படும்.
பொதுவாக ஒன்று முதல் அதிகபட்சம் நான்கு ஸ்டென்ட் வரை பொருத்துவதுதான் சகஜம். ஆனால், சில நபர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள மாட்டோம் என்ற மனநிலையில் உறுதியாக இருப்பார்கள்.
அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஸ்டென்ட் பொருத்தப்பட வேண்டி வரலாம். ஒரே சமயத்தில் இல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களையும் பார்க்கலாம்.
எனக்குத் தெரிந்து ஒரு நபருக்கு 12 ஸ்டென்ட் வரை பொருத்தப்பட்டதையும் பார்த்திருக்கிறேன்.
ரத்தக்குழாயில் அடைப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும் பிரச்னை. ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம், அந்த நபருக்கு ரத்தக்குழாயில் அடைப்போ, மாரடைப்போ வராது என்று சொல்லவே முடியாது.

அந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது என்பது நம் கையில்தான் உள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
புகை மற்றும் மதுப்பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, உறக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இதயநலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். அதன் மூலம் ரிஸ்க்கை ஓரளவு குறைக்க முடியும்.
மற்றபடி, இதற்கான நிரந்தர தீர்வு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, வாழ்வியலில் அக்கறை செலுத்துவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.