காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!
Doctor Vikatan: உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதா, இந்துப்பு சிறந்ததா?
Doctor Vikatan: என்னுடைய அலுவலக நண்பர், தினமும் உப்பில்லாத உணவுகள்தான் கொண்டு வருவார். அவர்கள் வீட்டில் பெரும்பாலும் உப்பில்லாத சமையல்தானாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்துப்பு உபயோகிப்பதாகவும், அதுதான் ஆரோக்கியமான நடைமுறை என்றும் சொல்கிறார். உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் எல்லோருக்கும் அவசியமானதா, ஆரோக்கியமானதா... ரெகுலர் உப்புக்கு பதில் இந்துப்பு பயன்படுத்துவது சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

உப்பு நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அதே நேரம் அதன் அளவு அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம், இதய பாதிப்பு என நிறைய பிரச்னைகள் வரலாம். இதற்கெல்லாம் பயந்துகொண்டு சிலர் உணவில் உப்பே சேர்ப்பதில்லை. அதுவும் தவறனாது.
சோடியம் என்ற உப்பானது நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்து. அதை அறவே தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அளவோடு சேர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சோடியமானது, நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் இயல்பிலேயே இருக்கும். உணவின் மூலம் கிடைக்கும் உப்புச்சத்து குறித்து நாம் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை.

எனவே, அதைத் தாண்டி நாம் அளவுக்கதிமாக உப்பு சேர்க்கும்போதுதான் பிரச்னையாகிறது. சோடியம் குறைபாட்டால் தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்பான பாதிப்புகளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பொதுவாக 1.5 முதல் 2 கிராம் அளவைவிட குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது. உப்பே வேண்டாம் என யாருக்கும் அறிவுறுத்துவதில்லை.
சிலருக்கு குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லும்போது நிறைய தண்ணீர் குடிக்குமாறும், அதில் சிட்டிகை உப்பு சேர்த்துக் குடிக்கும்படியும் அறிவுறுத்துவோம். அது நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உப்பை அறவே தவிர்ப்பது சரியானதல்ல. அளவோடு இருக்கும்போது எதுவும் ஆபத்தாவதில்லை.
பிங்க் ஹிமாலயன் சால்ட் எனப்படும் இந்துப்பு ஆரோக்கியமானது என நினைத்து நிறைய பேர் இன்று உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுத்திகரிக்கப்படாத கல் உப்பை போல இந்துப்பிலும் கூடுதலாக சில தாதுச்சத்துகள் இருக்கும். அதைவைத்து அது ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அது உப்பே இல்லை, அதை எடுத்துக்கொள்வதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்காது என குழப்பிக்கொண்டு நிறைய பேர் வழக்கத்தைவிட அதிக அளவில் இந்துப்பை சேர்த்துக்கொள்கிறார்கள்.
உங்களுக்கு விருப்பமானால் இந்துப்பு பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் 98 சதவிகிதம் சோடியம் உள்ளதுதான் என்பதை மறக்க வேண்டாம். அதனால் அதையும் பரிந்துரைக்கப்பட்ட அளவுதான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.