10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா செங்கோட்டையன்! - அதிமுக-வில் என்ன நடக்கி...
``விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்
`விஜய் காங்கிரஸ் மீது மரியாதை கொண்டவர்'
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்காக்குழியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியின்மீது மரியாதை கொண்டவர். அவரது கொள்கையும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஒத்துப் போகிறது. மதவாத மத்திய பா.ஜ.க. ஆட்சியை விஜய் கடுமையாக எதிர்க்கிறார்.

விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே, 2006 ஆம் ஆண்டு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். அப்போது விஜய் காங்கிரஸில் சேரும் மனநிலையில் இருந்தார். விஜய்க்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கும் எண்ணம் தலைமைக்கு இருந்தது. ஆனால் வயது விதிமுறை காரணமாக அந்தப் பதவி வழங்க இயலவில்லை.
விஜய் தொடர்ந்து ராகுல் காந்தியின் செயல்பாட்டைப் பாராட்டி வருகிறார். ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது விஜய் கண்டனம் தெரிவித்தார்.
இதையெல்லாம் வைத்து, விஜயின் த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்."

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. தேர்தல் நெருங்கியபோது கூட்டணி குறித்து காங்கிரஸ் அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும். இப்போது இந்தியா கூட்டணியில் திமுகவும் உள்ளது, அவ்வளவுதான்.
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் உரிய மரியாதையை எதிர்பார்க்கிறது. கடந்த தேர்தலில் போல் 25 தொகுதிகளை மட்டும் வழங்கினால், காங்கிரஸ் நிச்சயம் ஏற்காது. தலைவர் ராகுல் காந்தியும் அதை ஏற்க மாட்டார்.
திமுக கூட்டணியில் இருந்தாலும்..
"ஆட்சியில் பங்கு வேண்டும் என்றால், அதைத் தேர்தல் நேரத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே பேசி முடிக்க வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு தெரிவித்துள்ளோம். தொண்டர்களின் எண்ணத்திற்கு நிச்சயம் தலைமை மதிப்பளிக்கும்.
இப்போது கட்சி வளர்ச்சியை முன்னிறுத்திப் பணி செய்து வருகிறோம். அடுத்ததாக இரண்டு லட்சம் கிராமக் கமிட்டியினரை திரட்டி மாநாடு நடத்த உள்ளோம். அந்த மாநாட்டிற்கு இளம் தலைவர் ராகுல் காந்தியை அழைக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அதிக தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் கேட்பது தமிழக அரசியலில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி நம்மிடம் பேசிய ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கூறியதாவது:
"திமுக கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் இருக்கிறோம். வரும் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள முடியாது.
1967-க்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. ஆனாலும், கட்சி உயிரோட்டத்துடன் உள்ளது. கட்சியின் வலிமைக்கு ஏற்ப அதிக தொகுதிகளைக் கேட்போம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கேட்போம்.
தமிழகத்தின் தரை நிலைமை குறித்து அகில இந்திய தலைமையிடம் தெரிவித்துள்ளோம்," என்றார்.