Thandakaranyam: ``குக்கூ படத்துக்குப் பிறகு நடிப்பை மாற்றிக்கொண்டேன்" - நடிகர் த...
AR Rahman: இளையராஜா பொன்விழா; ``அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில்'' - ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் கடந்த 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இசையுலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமை தேடித் தந்தவர் இசைஞானி.
இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கிணைந்த மாமனிதர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியலிசை, மக்களிசை இவற்றுக்கிடையே நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை.
குறிப்பாக திரை இசையை கடந்து, முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது.
அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மிக்க மகிழ்ச்சி உண்டு. உங்களைப் போலவே இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் நானும் பெருவுவகைக் கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா அவர்களின் பொன் விழா ஆண்டைத் தமிழ்நாடு அரசே ஒருங்கமைத்துக் கொண்டாடுவதை இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.