``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்டையன் பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும்.
அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் 'அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும்' என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.

செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அதிமுகவில் அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.
அவர் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் (செப் .15) முடிவடைந்த நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"நூறாண்டு காலம் ஆட்சி கட்டிலிலே அமர வேண்டும் என்ற புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன்.
இந்தக் கருத்திற்கு புரட்சித் தலைவி அம்மாவினுடைய விசுவாசிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது."

என்னுடைய நோக்கம் இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான். புரட்சித் தலைவி அம்மாவினுடைய ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்தக் கருத்துக்களை 5 ஆம் தேதி அன்று நான் பிரதிபலித்தேன்.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை மனதிலே கொண்டு புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் இயக்கம் வலிமை பெற்று 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எல்லோரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து விடைபெறுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.