பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு
அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி
அதிமுக தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து செய்வார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
"அண்ணாவின் தாரக மந்திரங்களை வைத்துதான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஆட்சி நடத்தினார்கள். அவர்களது கனவு நிறைவேற வேண்டும் என்றால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் நடக்கும் என மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொண்டர்களின் உணர்வுகளையும் தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து நடந்து அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது. அவர்களின் கனவுகள் நனவாக்கும் நிலையில் இன்று சட்ட விதிகள் இல்லை. சாதாரண தொண்டன், அதிமுகவில் பொதுச் செயலராக வரலாம் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.

தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை காப்பாற்றுவார்கள்.
செங்கோட்டையனுடன் தொடர்ந்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். சசிகலா, செங்கோட்டையன் ஆகியோருடன் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடனும் போனில் பேசினேன். சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். நேரம் ஒத்துவந்தால் சந்திப்போம்" என்று பேசினார்.
மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு 'அரசியலில் எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்' என்றார்.