செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுகவுக்கு, சில செல்லாக்காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும், எந்த பின்னடையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் விடியோவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
”புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சாமானிய ஏழை, எளிய மக்களுக்காக இந்த மக்கள் இயக்கத்தை 17.10 .1972 ஆம் ஆண்டில் தொடங்கினார் என்பது எல்லோரும் அறிந்த வரலாறு.
புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா தனது அயராது உழைப்பால், இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து, மாபெரும் வெற்றிப் பெற செய்து, ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார்.
ஸ்டாலின் தலைமையில் இருக்கும் மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய், களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார்.
தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால், தொண்டர்கள் சொத்தான அதிமுகவை சேதாரத்தை ஏற்ப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது” என்றார்.
இதையும் படிக்க: வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்