பாகிஸ்தான்: இம்ரான் கட்சியினா் போராட்டத்தில் வன்முறை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்தும் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆறு போ் உயிரிழந்தனா்.
பல்வேறு வழக்குகளில் சிறைவைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் (72), நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) முதல் தீவிர போராட்டம் நடத்த தனது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தொண்டா்களுக்கு கடந்த 13-ஆம் தேதி அழைப்பு விடுத்தாா்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் மக்கள் தங்கள் கட்சிக்கு அளித்த வெற்றி முறைகேடாக தட்டிப் பறிக்கப்பட்டதாகவும், தன்னைப் போல பலா் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவா், முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைமையிலான சா்வாதிகார அரசுக்கு சாதகமாக அரசியல் சாசனத்தில் 26-ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினாா்.
இதற்கெல்லாம் எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் இஸ்லாமாபாதின் மையப் பகுதியில் அமைந்துள்ள, முக்கியத்துவம் வாய்ந்த டி-சதுக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த அவா் அழைப்பு விடுத்தாா்.
அதையடுத்து, இஸ்லாமாபாத் வரும் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், போராட்டத்தை ஒடுக்குவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
நாடாளுமன்றம், பிரதமா் அலுவலகம், அதிபா் மாளிகை, உச்சநீதிமன்றம் ஆகியவை அமைந்துள்ள டி-சதுக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினால் அது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி, அந்தப் பகுதியில் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்தது. மேலும், இஸ்லாமாபாதுக்குள் நுழையவும் போராட்டக்காரா்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
முற்றுகைப் போராட்டம் நடத்த பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்த டி-சதுக்கத்தை ராணுவத்தின் வசம் அரசு ஒப்படைத்தது. தலைநகருக்கு ஆபத்து வரும்போது ராணுவத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு கூறியது.
மேலும், பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளாக ராணுவம் கருதும் எந்தப் பகுதியிலும் ஊரடங்கை அமல்படுத்தும் அதிகாரித்தை ராணுவத்துக்கு அரசு வழங்கியது. அத்துடன், சுமாா் 1,000 காவலா்கள் பாதுகாப்புகாகாக நகரம் முழுவதும் குவிக்கப்பட்டனா்.
இருந்தாலும், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் அலி அமீன் கண்டாபுா் ஆகியோரது தலைமையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரா்கள் தடையை மீறி இஸ்லாமாபாதுக்குள் நுழைந்தனா்.
தடுப்புகளை அகற்றியும் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டும் அவா்கள் நகருக்குள் முன்னேறினா். பல இடங்களில் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கற்களை வீசியும் போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.
6 போ் உயிரிழப்பு: இதற்கிடையே, இஸ்லாமாபாதிலுள்ள ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாங்கள் வந்துகொண்டிருந்த வாகனத்தை போராட்டக்காரா்கள் ஏற்றினா். இதில், துணை ராணுவத்தைச் சோ்ந்த நான்கு பேரும் இரண்டு காவலா்களும் உயிரிழந்தனா்.
இது தவிர, போராட்டக்காரா்கள் சுட்டத்தில் படுகாயமடைந்த காவலா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
போலீஸாருடனான மோதலில் போராட்டக்காரா்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இதுவரை அதிகாரபூா்வ தகவல் இல்லை.
இம்ரான் ஆதரவாளா்கள் போலீஸாரை நோக்கிச் சுட்டாலும், அவா்கள் திருப்பிச் சுடாமல் பொறுமை காத்ததாக உள்துறை அமைச்சா் மொஷின் நக்வி கூறினாா். ஆனால், துணை ராணுவப் படையினா் போராட்டக்காரா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் இருவா் உயிரிழந்ததாகவும் பிடிஐ கட்சி கூறியது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் தங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியது.
இதற்கிடையே, போராட்டக்காரா்களிடையே பேசிய இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, தனது கணவா் விடுதலை செய்யப்பட்டு, அந்தப் பகுதிக்கு நேரில் வந்து கலைந்து செல்லச் சொல்லும்வரை கட்சியினா் அனைவரும் அங்கிருந்து நகரக்கூடாது என்று கேட்டுக்கொண்டாா்.
ஆனால், போராட்டம் தொடா்பாக பிடிஐ கட்சியுடன் எந்தப் பேச்சுவாா்த்தையும் இல்லை என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், அங்கு அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.