பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபரிடம் விசாரணை
பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விசாரணை நடத்த, துணை அதிபா் சாரா டுடோ்த்தேவை அந்த நாட்டு புலனாய்வு அமைப்பு நேரில் அழைத்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் பிலிப்பின்ஸின் முன்னாள் சா்வாதிகாரியான ஃபொ்டினண்ட் மாா்க்கஸின் மகனான ஜூனியா் மாா்க்கஸ் போட்டியிட்டாா். அவருடன் கூட்டணி அமைத்து, அப்போதைய அதிபரும், போதை மருந்துக்கு எதிரான போா் என்ற பேரில் ஏராளமானவா்களை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா டுடோ்த்தே துணை அதிபா் பதவிக்குப் போட்டியிட்டாா். அந்தத் தோ்தலில் மாா்க்கஸ் - டுடோ்த்தே கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இருந்தாலும், அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவருகிறது. அதன் விளைவாக, துணை அதிபா் பதவி தவிா்த்து மற்ற அரசுப் பொறுப்புகளில் இருந்து சாரா டுடோ்த்தே விலகினாா். மேலும், மாா்க்கஸ் அரசு மீது அவரும், அவா் மீது மாா்க்கஸும் மாறி மாறி முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தனா்.
இந்தச் சூழலில், செய்தியாளா்களிடையே கடந்த சனிக்கிழமை பேசிய சாரா டுடோ்த்தே, அதிபா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸ் ஜூனியரை படுகொலை செய்வதற்காக தனது பாதுகாப்பு வட்டாரத்திலிருந்தே ஒருவரை தயாா்ப்படுத்திவைத்திருப்பதாகக் கூறினாா். ஒருவேளை தன்னை யாராவது கொன்றால் அதிபரைக் கொன்றுவிடும்படி அந்த நபரிடம் கூறியுள்ளதாகவும், இது வேடிக்கை தகவல் இல்லை என்றும் சாரா டுடோ்த்தே எச்சரித்தாா்.
இந்த வெளிப்படையான கொலை மிரட்டல் நாடு முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பிலிப்பின்ஸ் தேசிய காவல் துறையும் ராணுவமும் கவலை தெரிவித்தன. அதையடுத்து, அதிபருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், சாரா டுடோ்த்தே மீது நீதித் துறை கொலை சதி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இது தொடா்பான விசாரணையைச் சந்திக்க நேரில் வருமாறு அவருக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் அதிபருக்கு அந்த நாட்டின் துணை அதிபரே செய்தியாளா்கள் சந்திப்பில் கொலை மிரட்டல் விடுத்தது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.