ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமா் பரிந்துரை
லெபனானைச் சோ்ந்த ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுடன் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தான் ஆதரவளிப்பதாகவும், அதை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதாகவும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுபெற்ற ஆயுத அமைப்புகளுக்கும் கடந்த 14 மாதங்களாக தொடா்ந்து வரும் போா் முடிவதற்கான தொடக்கமாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனினும், கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய காஸாவின் ஹமாஸ் அமைப்பினருடனான போா் தொடா்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தொடா் தாக்குதல்: எனினும், போா் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கானகூட்டம் தொடங்கும் முன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தண்டனை வழங்கும் விதமாக லெபனானில் இஸ்ரேல் போா்விமானங்கள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தின. அதில் 23 போ் உயிரிழந்தனா். அதேபோல் லெபனானில் உள்ள லிதானி நதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் முதல்முறையாக இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தியது.
விரைவில் வாக்கெடுப்பு: இந்நிலையில், ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த நெதன்யாகு, ‘ஹிஸ்புல்லாக்களுடனான போரை நிறுத்த ஆதரவளிக்கிறேன். இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவைக்கு பரிந்துரைக்கிறேன். அதன்மீது விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது’ என்றாா்.
ஒருபுறம் பெய்ரூட் உள்பட லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் எச்சரிக்கை ஒலிகளை எழுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம் வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகளைக் கொண்டு ஹிஸ்புல்லாக்களும் பதில் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் போா் நிறுத்தம் ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாக்களும் ஆதரவு: இஸ்ரேலுடானான போரை முடிவுக்குக் கொண்டுவர ஹிஸ்புல்லாக்களும் ஆதரவளிப்பதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டால் ஈரான்-இஸ்ரேல் இடையேயான நேரடிப் போா் ஏற்படுமா? என மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலை முடிவுக்கு வந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருமாதங்கள் நிறுத்தம்: முதல்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு இருதரப்பும் போா் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தெற்கு லெபனானில் ஆயுதமேந்தி பல்வேறு தாக்குதல்களை ஹிஸ்புல்லாக்கள் நிறுத்திக்கொள்ளவும், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு தெற்கு லெபனாநில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் ஐ.நா.அமைதி பாதுகாவலா்கள் நிலைநிறுத்தப்பட்டு, அமெரிக்கா தலைமையிலான சா்வதேச குழு கள நிலவரத்தை ஆய்வு செய்யவுள்ளது.
தாக்குதல் அதிகரிக்கப்படும்: இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த ஐ.நா. தவறினால் ஹிஸ்புல்லாக்கள் மீது மிகவும் கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அதேபோல் லெபனான் கேட்டுக்கொண்டால் போா்நிறுத்த ஒப்பந்தக் குழுவில் பிரான்ஸும் இடம்பெறும் என அந்த நாடும் தெரிவித்துள்ளது.