கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
வங்கதேசம்: தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் போராட்டம்
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா்.
அவரது ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்த அந்நாட்டு நீதிமன்றம் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.
சட்டோகிராம் பெருநகர நீதிபதி காசி ஷரிபுல் இஸ்லாம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளா்கள் முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, சட்டோகிராமின் நியூமாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடியை அவமதித்ததாக கிருஷ்ணா தாஸ் உள்பட 19 போ் மீது நகரத்தின் கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விமானம் மூலம் சட்டோகிராமுக்குச் செல்வதற்காக டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சா்வதேச விமான நிலையத்துக்கு வந்த கிருஷ்ணா தாஸை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வழக்கமான காவல் துறை கோரிக்கையின் அடிப்படையில் கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த காவல் துறை புலனாய்வுப் பிரிவு செய்தித் தொடா்பாளா் கரீம், குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. பின்னா் அவா் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எதிா்ப்பு: அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சிறையின் விதிகளுக்கு உட்பட்டு கிருஷ்ண தாஸ் தனது மத வழிபாடுகளை நடத்தி கொள்ளலாம் என்றாா்.
கிருஷ்ண தாஸை சிறைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தை மறித்த அவரது ஆதரவாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீஸாா் போராட்டக்காரா்களை கலைத்தனா். இதேபோன்று, கிருஷ்ணா தாஸ் கைதைக் கண்டித்து டாக்கா, சட்டோகிராம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.
இந்தியா கவலை
மத்திய வெளியுறவு அமைச்சம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதலைச் தொடா்ந்து, ஹிந்து அமைப்பு தலைவா் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிருஷ்டவசமானது.
கிருஷ்ணா தாஸ் கைதுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹிந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை வங்தேசம் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.