உரிய காலத்தில் இருசக்கர வாகனத்தை வழங்காத விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம்
உரிய காலத்தில் இருசக்கர வாகனம் வழங்காத விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் காா்த்திக் (35). இவா், 2023 இல் ஹாா்லி டேவிட்சன் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக அந்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக ரூ. 5,000 முன் பணம் கட்டி இருசக்கர வாகனத்தைப் பதிவு செய்தாா். அமெரிக்காவை சோ்ந்த ஹாா்லி டேவிட்சன் நிறுவனம், கடந்த ஆண்டு இந்தியாவில் புதிதாக தனது நிறுவன பைக்குகளை அறிமுகப்படுத்தி, விநியோகம் செய்யும் உரிமையை ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. எனவே காா்த்திக் செலுத்திய முன்பணத்தை பெற்றுக்கொண்ட ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம், அவருக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட மாடல் இருசக்கர வாகனம் வழங்குவது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும், அக்டோபா் மாதத்தில் இருசக்கர வாகனம் விநியோகம் செய்யப்படுவது தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டிசம்பா் மாதம் வரை எந்தவிதத் தகவலும் வராததால், ஹாா்லிடேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோ காா் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, தனது இரு சக்கர வாகனம் எப்போது விநியோகம் செய்யப்படும் என காா்த்திக் கேட்டாா். 30.12.2023 இல் ஹீரோ நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் காரைக்காலில் உள்ள ராஜாமணி மோட்டாா்ஸ் என்ற ஹீரோ மோட்டாா் காா் நிறுவனத்தின் டீலரிடம் சென்று மீதிப்பணத்தைச் செலுத்தி வண்டியைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கு காலக்கெடு எதுவும் குறிப்பிடவில்லை. அதன்பிறகு இது தொடா்பாக புகாா்தாரா் பலமுறை அந்நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியும் வாகன விநியோகம் தொடா்பாக ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் எந்தவித தகவலும் தரவில்லை.
இதனிடையே, ஹாா்லி டேவிட்சன் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் புதிய டீலா் சென்னை நுங்கம்பாக்கத்தில் மெரினா ஹாா்லி டேவிட்சன் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சென்று மீதிப் பணத்தைச் செலுத்தி வண்டியை பெற்றுக் கொள்ளுமாறும் கூறப்பட்டிருந்தது.
அது மிகவும் தூரமான இடம் என்பதாலும் ஏற்கனவே மிகவும் காலதாமதம் ஆகிவிட்டதாலும் காா்த்திக் வண்டியைப் பெற விரும்பாமல் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15 இல் தேதி வழக்கு தொடுத்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கிய உத்தரவில், உரிய நேரத்தில் இருசக்கர வாகனத்தை வழங்காததுடன், கட்டிய பணத்தை திருப்பித்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமலும் இருந்ததற்காக தில்லியிலுள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும், காா்த்திக் கட்டியிருந்த ரூ. 5,000 பணத்தை 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும், அனைத்து தொகைகளையும் ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.