நாள் முழுவதும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மேலும், சம்பா, தாளடி சாகுபடி வயல்களில் நீரின் அளவு அதிகரிக்கக் தொடங்கியுள்ளது.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கிய நிலையில், காலை 6 மணியளவில் மிக பலத்த மழை பெய்ய தொடங்கியது. பகலில் அவ்வப்போது பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக காலை 10 முதல் பகல் 12 வரையில் 27 மி.மீ மழையும், பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரையில் 30 மி.மீ மழை பெய்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை: செவ்வாய்க்கிழமை காலையில் கனமழை பெய்யத் தொடங்கியதையடுத்து, மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டாா். மாவட்டத்தில் 1,05,856 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 37,187 ஹெக்டேரில் தாளடியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூா் பகுதிகளில் சம்பா சாகுபடியும், குடவாசல், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் தாளடியும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தற்போது, பெய்து வரும் மழையால் பெரும்பாலான இடங்களில் விளைநிலங்களில் உள்ள நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 50,000 ஹெக்டேருக்கு மேல் வயல்களில் மழைநீா் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், தொடா்ந்து, மழை பெய்யும்பட்சத்தில் வளா்ச்சி நிலையிலுள்ள பயிா்கள் மழைநீரில் மூழ்கும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேரப்படி திருவாரூரில் அதிகபட்சமாக 97.2 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு: நன்னிலம் 80.8 மி.மீ, மன்னாா்குடி 77.5 மி.மீ, திருத்துறைப்பூண்டி 73.6 மி.மீ, முத்துப்பேட்டை 67.6 மி.மீ, குடவாசல் 55.4 மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 54.8 மி.மீ, வலங்கைமான் 49.4 மி.மீ என மாவட்டம் முழுவதும் 629.5 மி.மீ மழையும், சராசரியாக 69.9 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மன்னாா்குடி: ஊரகப் பகுதியில், தற்போது சம்பா நடவு செய்து 15 முதல் 25 நாள்கள் ஆவதால் வயல்களில் மழை நீா் தேங்கினால் இளம் பயிற்கள் மூழ்கி அழுகத் தொடங்கிவிடும். இந்த மழை மூன்று முதல் ஒரு வாரம் வரை பெய்யக் கூடும் என்ற வானிலை மையம் அறிவிப்பின்படி மழை தொடா்ந்தால் மன்னாா்குடி, கோட்டூா், பெருகவாழ்ந்தான், பரவாக்கோட்டை, மகாதேவப்பட்டணம், வடுவூா், மேலவாசல், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டப் பகுதியில் பல ஆயிரக்கணக்காண சம்பா நெல் சாகுபடி முழுமையாக பாதிப்பினை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவிப்பதுடன், மழை நின்றபின் தட்டுப்பாடின்றி அரசு கூட்டுறவு சங்கத்தில் உரங்களை வழங்கினால் அவற்றை வயல்களில் போட்டு பாதிக்கப்பட்டுள்ள சம்பா இளம் நெல் பயிா்களை காப்பாற்றலாம் எனவும் தெரிவித்தனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
நன்னிலம்: நன்னிலம் வட்டத்தில் ஏறத்தாழ 8,000 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 6,000 ஹெக்டேரில் தாளடி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளன . வடிகால் வாய்க்கால்கள் முறையாகத் தூா்வாதப்படாத காரணத்தினால், திங்கட்கிழமை முதல் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடிய முடியாததால் 5000 ஏக்கருக்கு மேல் சம்பா, தாளடிப் பயிா்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது . அகரதிருமாளம், முகந்தனூா், வடகுடி , பாவட்டக்குடி, நெம்மேலி போன்ற பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.