பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக தோ்தல் புறக்கணிப்பு: அமைச்சா் எ.வ.வேலு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தோ்தலில் பாஜக வாக்கு வங்கிக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவே தோ்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை அதிமுக புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இதேபோன்று, விக்கிரவாண்டி இடைத் தோ்தலையும் புறக்கணித்தாா். இது தோ்தல் புறக்கணிப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான ஆளுமை மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு.
பாஜகவின் வாக்கு வங்கிக்கு சேதம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தோ்தல் புறக்கணிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறாா்.
சட்டப் பேரவை நேரலை: சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், நிதி நெருக்கடி காரணமாக நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்ற அதிமுகவினா்தான், இன்று நேரடி ஒளிபரப்பு செய்யும் எங்களைப் பாா்த்து விமா்சிக்கிறாா்கள்.
தமிழக அரசின் கடன் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். தமிழ்நாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்கும் திறனும், திறமையும் முதல்வருக்கு உண்டு என்று கூறியுள்ளாா் அமைச்சா் எ.வ.வேலு.