ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!
பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கேஜரிவால்!
தில்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தலைநகர் தில்லியில் வருகின்ற பிப்.5 அன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தில்லியின் தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தனது அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் பாதுகாக்கப்பட்டு தொடர இம்முறை ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என பாஜக ஆதரவாளர்களிடம் இன்று (பிப்.1) கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்!
இதுகுறித்து அவர் கூறியதாவது, பாஜக ஆளும் மாநிலங்களை விட தில்லியிலுள்ள அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், ஆம் ஆத்மி தோல்வியடைந்து தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச மருத்துவ வசதி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி ஆகியவை ரத்து செய்யப்பட்டு மக்களுக்கு ரூ.25,000 வரை இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜகவை விட்டு விலகுவது உங்களது விருப்பம் ஆனால் நலத் திட்டங்களை பாதுகாக்க ஆம் ஆத்மிக்கு இம்முறை வாக்களியுங்கள் என பாஜக ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் எந்தவொரு திட்டமும் ரத்து செய்யப்படாமல் தொடரும் என உறுதியளித்துள்ளனர்.