பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்பு; பின்னணி என்ன?
வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும், அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மாநில நிர்வாகியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பா.ஜ.க பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷாவுக்கு, ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச்சில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, என் மீது கொடுக்கப்பட்ட புகாரில் மதுரை திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதல் குற்றவாளியாக நான் சேர்க்கப்பட்டுக் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்தபோது அரசு தரப்பில், தவறுதலாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற வாதத்தைப் பதிவு செய்ததால், அதனைப் பதிவு செய்து அந்த வழக்கு அப்போதே ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நீதிமன்றத்தால் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு என்னைக் கைது செய்துள்ளனர்.
மனுதாரர் மீது வேண்டுமென்றே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலமும் பெறப்பட்டு விட்டது. எனவே இந்த வழக்கில் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது 50 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றுவேன்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சக்திவேல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டது.
"அரசியல் பழி வாங்கும் நோக்கோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, "வழக்கின் தன்மை, ஆவணங்களை மட்டும்தான் நீதிமன்றம் பார்க்கும். அரசியல் பற்றி பேச வேண்டாம். இவருடைய வழக்கு விவரங்களில் உள்ள வாக்குமூலங்களைப் பார்க்கும்போது குற்றம் செய்ததாகவே தெரிய வருகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது" என நீதிபதி தெரிவிக்க, "50 நாட்களுக்கு மேலாகச் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
"பத்து நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்த நீதீபதி, வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
