பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!
பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மேலாளர் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மீது அசாம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க் (வயது 52), கடந்த செப்.19 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால், அவர் ஆழ்கடல் சாகத்தின்போது உயிரிழக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பாடகர் ஸுபீன் கர்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற இருந்த விழாவின் ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா ஆகியோர், நேற்று (அக். 1) தில்லியில் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவர் மீதும் பாரத் நியாய சன்ஹிதா சட்டத்தின் 103 ஆம் பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அசாம் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கைது செய்யப்பட்டுள்ள விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா என்பவர் அசாமில் உள்ள குவாஹட்டி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நானி கோபால் மஹாந்தாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!