57 வருடம், மாறாத சென்னை, மாறாத மனிதர்கள் - ஒரு மெட்ராஸ்காரனின் டைரி #Chennaida...
பாடகர் ஸுபீன் கார்க் மரணம்: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்!
பிரபல அசாமீஸ் பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அசாமீஸ், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, இன்று (செப்.19) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் ஸுபீன் கார்கின், திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திய் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில், பாடகர் ஸுபீன் கார்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவு:
“பாடகர் ஸுபீன் கார்கின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவர் இசைத்துறைக்கு ஆற்றிய பணியால் என்றென்றும் நினைவுக்கூரப்படுவார்.
அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு:
”ஸுபீன் கார்கின் மறைவு ஒரு துயரச் சம்பவம். அவரது குரல் ஒரு தலைமுறையை வரையறுத்தது மற்றும் அவரது திறமை உண்மையில் நிகரற்றது.
அசாமீஸ் இசையின் நிலப்பரப்புக்கு மறுவடிவம் கொடுக்க அவர் தனது சொந்த துயரங்களை வென்று வந்தார். அவரது விடாமுயற்சியும் தைரியமும் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டு சென்றுள்ளது. அவர் என்றுமே நமது இதயங்களிலும் எண்ணங்களிலும் வாழ்ந்திருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஸுபீன் கார்க், இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பு ஏற்பாடு!