பாலய்யா வஸ்தாவய்யா 7: `பருப்பே துணை' - தமிழ் IAS சென்டிமென்ட் - பாலய்யா தோண்டிய குழிகள்
பாலய்யா தொடருக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..!
''பாலய்யா பற்றி பாசிட்டிவா சொல்ல நிறைய உண்டே..? அதை விட்டுறாதீங்க யப்போ!" என்ற விமர்சனத்துக்கு நாம் செவிகொடுத்தே ஆக வேண்டும்... அதனால்...
பாலய்யா எப்போதும் தன்னை வள்ளல் என்றும் கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர் என்றும் பாராட்டுவதை வெகுவாக விரும்புவார். இந்துபுரம் தொகுதியிலிருந்து யாரேனும் உதவி கேட்டு வந்தால் ஸ்ரீசத்ய சாய் மாவட்ட கலெக்டருக்கு போன் கால் பறக்கும். சுற்றிலும் நாற்பது பேர் பார்க்கிறார்களே என ஹைபிட்ச்சில் ஸ்டைலாய் உத்தரவு போடுவார். "மன பாலய்யா தேவுடு" மொமண்ட்டில் தாடையில் விரல் வைத்து ஆச்சர்யத்தோடு கூட்டமே பார்க்கும்.
ஆனால் மறுமுனையில்,
"ஐயா... ஒரு கலெக்டரா இந்த உதவியைச் செய்ய முடியாதுங்க... ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு. எல்லாத்துக்கும் மேலே இதுக்கு சட்டத்தில் இடமில்லை..!" என்று சொன்னால் போச்சு. தன்னுடைய படத்தின் ஸ்டைலிலேயே டிரான்ஸ்ஃபர் ஆர்டர் சுடச்சுட அந்த கலெக்டரின் டேபிளுக்குச் சென்றுவிடும். அந்த அளவுக்கு உதவுவதில் வேகமானவர் என்றால், அது நடக்காமல் யாரும் முட்டுக்கட்டை போட்டால் உருட்டுக்கட்டை மோடு தான்! கோபத்தில் கை வைத்துவிடுவாரோ எனத் தள்ளி நின்றே பல அதிகாரிகள் பேசுவது வழக்கம்.
புதிதாக உருவான ஸ்ரீசத்ய சாய் மாவட்டமாக இருக்கட்டும், இதுக்கு முன் இருந்த அனந்தபுரம் மாவட்டமாக இருக்கட்டும் பாலய்யா சந்திரபாபு நாயுடுவிடம் வைக்கும் ஒரே கோரிக்கை என்ன தெரியுமா? "நல்ல தமிழ் ஐ.ஏ.எஸ் ஆபிஸர்ஸை என் தொகுதிக்கு போஸ்டிங் போடுங்க மாமா!" என்பதுதான். புது மாவட்டம் உருவாவதற்கு முன்பே அனந்தபுரத்தில் பெரும்பாலும் தமிழ் அதிகாரிகள் தான் மாவட்ட ஆட்சியர்களாக இருப்பார்கள். நம்ம மதுரைக்காரரான வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் அங்கு கலெக்டராக இருந்தபோது லேபாக்ஷி திருவிழாவை சிறப்பாக நடத்தி பாலய்யாவின் குட்புக்கில் இடம்பிடித்தார்.
"தமிழ் அதிகாரிகள் நேர்மையானவர்கள். துடிப்பானவர்கள். எந்த மாநிலத்தில் வேலை செய்தாலும் அதை வேலையாக நினைக்க மாட்டார்கள். மக்கள் சேவையாக நினைப்பார்கள். மக்கள் சேவையில் முதலிடத்தைப் பிடிக்க சின்ஸியராய் பணி செய்வார்கள். கடின உழைப்பாளிகள் அவர்கள்!" - இது பாலய்யாவே சொன்ன ஸ்டேட்மென்ட்.
தமிழ் நாட்டின் மீதும் தமிழ் அதிகாரிகள் மீதும் ஒரு பாசிட்டிவ் சிந்தனையை வைத்திருக்கிறார் பாலய்யா. அவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து அனுப்புவார். எவ்வளவு வயது குறைந்த அதிகாரியானாலும் சரி... "அண்ணய்யாகாரு" தான் அவருக்கு!
அப்படி அங்கு வேலை பார்த்த பல தமிழ் ஐ.ஏ.எஸ் ஆபிஸர்களையும் அவர் இப்படித்தான் நடத்தியிருக்கிறார். அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பார். தன் தந்தை என்.டி.ஆரும் இப்படித்தான். முதலமைச்சராக இருந்தபோது உயர்பதவிகளில் பல தமிழர்களை நியமித்து ஆட்சி செய்தார் என்பதை நன்கறிந்தவர் பாலய்யா.
தமிழ் அதிகாரிகளால் பெரும்பாலும் அவருக்கு சிக்கல் வந்ததில்லை. பாலய்யா அதிரடியாக யாருக்கேனும் வேலையோ, பண உதவியோ செய்யச் சொன்னால் தயங்காமல் மாவட்ட கருவூலத்திலிருந்து உடனடியாக கோப்பில் கையொப்பமிட்டு உதவித்தொகையை விடுவித்து விடுவார்கள். தற்காலிக வேலைக்கான உத்தரவையும் வழங்கி விடுவார்கள்.
சொந்தமாநில ஹோம் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் தான் அவருக்கு பிரச்னையே.
"என்.டி.ஆர் புள்ளைனா என்ன... கொஞ்சம் ஓரமாப் போய்யா!" என்கிற ரீதியில் இவரை டீல்செய்யும் இளம் அதிகாரிகளால் இரண்டு தடவை அவமானப்பட்டிருக்கிறார். காயம்பட்ட சிங்கம் என்ன செய்யும். உடனடியாக தன் சொந்த நிதியிலிருந்து பண உதவியோ, வேலையோ கொடுத்து தன் கெத்தைக் காட்டிக்கொள்வார். இவர் கோபத்தை சந்திரபாபு நாயுடுதான் கன்ட்ரோல் செய்வார். அது என்ன மாயமோ அவருக்கு மட்டும் பயப்படுவார் பாலய்யா!
சந்திரபாபு நாயுடுவுக்கு பாலய்யா மீது பாசம் என்பதைவிட பயமே அதிகம். எந்த நேரமும் கோபத்தில் கனன்றுகொண்டிருக்கும் பாலய்யா எக்குத்தப்பாக ஏதாவது பண்ணிவிடுவாரோ என்று யோசித்துக்கொண்டிருப்பார் நாயுடு.
இப்படித்தான் முன்பு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு மீட்டிங்குக்குப் போன பாலய்யா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்காரும் சேரில் உட்கார்ந்துகொண்டார். அந்த சேரில் யாருமே உட்கார மாட்டார்கள். அதிகாரிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் வியர்த்துவிட்டது. ஆனாலும், கொஞ்சம்கூட பயப்படாமல் "I Dont Care" என்று மீட்டிங்கை முடித்துவிட்டுக் கிளம்பினார்.
இது பயங்கர சர்ச்சையைக் கிளப்பியது. 'இதெல்லாம் ரொம்ப தப்பு' என்கிற ரீதியில் மீடியாக்கள் பாலய்யாவை தாளித்தன. உடனடியாக சுடச்சுட ஒரு பிரஸ்மீட் வைத்தார் பாலய்யா.
"என் மாமா இருக்கையில் உட்கார யாரிடம் பர்மிஷன் கேட்கணும்? கேள்வி கேட்கிறேன்ல... பதில் சொல்லுங்க பார்ப்போம். நாளைக்கு அவருக்குப் பின்னாடி நான் தானே இங்கே உட்காரணும்?
அவர் இல்லாதப்போ உட்கார்ந்தது உங்களுக்கு ஏன் குற்றமா தெரியுதா? அப்படின்னா நான் இன்னும் ஸ்டைலா உட்காருவேன். அவ்வளவு ஏன் இந்த சேரை வீட்டுக்கே எடுத்துட்டுப் போய் உட்காருவேன்." என்று கோபமாகச் சொன்னவர், கடைசியாக சொன்னதைக் கேட்டு சந்திரபாபு நாயுடுவே ஆடிப்போயிருப்பார்.
"இப்பச் சொல்றேன்... சந்திரபாபு நாயுடுவோட அரசியல் வாரிசு நான் தான். அவரே மறுத்தாலும் இதுதான் நிஜம். இது அவருக்கும் நல்லாத் தெரியும். வெளிப்படையா அவர் சொல்லாததால நான் யாரோ கிடையாது.
மீடியாக்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்துவது ரொம்பவே கேவலமா இருக்கு! இனி கேள்வி கேட்டீங்க சினிமா பாலய்யாவைப் பார்ப்பீங்க!" என பிரஸ்மீட்டில் ரியாக்ஷன் காட்டி ஷாக்குக்கே ஷாக் கொடுத்தார்.
மேற்படி ஸ்டேட்மெண்ட் தெலுங்கு தேசம் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திக் கெட்டபெயரைச் சம்பாதித்தார். சீனியர்களில் சிலர் இன்றுவரை பாலய்யாவுக்கு எதிராக நிற்பது தனிக்கதை!
பாலய்யா என்றதும் அவரது வினோத பழக்க வழக்கங்கள் வண்டி வண்டியாய் வரிசை கட்டி நிற்கின்றன. பெரும்பாலும் "இதுலாம் மீடியாக்கள் சொல்லும் சர்தார்ஜி ஜோக் போல மிகைப்படுத்தப்பட்டவை!" என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், நிஜம் வேறு. பாலய்யாவிடம் நெருங்கிப் பழகிய சிலர் சொன்ன தகவல்கள் ஆச்சர்யம் அன்லிமிட் ரகங்கள் தான். நீங்க நம்பலைனாலும் அதுதான் நிஜம்.
அவைபற்றி இனி கொஞ்சம்...
பாலய்யாவுக்கு சிக்ஸ்பேக் கிடையாது. அதில் அவருக்கு நம்பிக்கையும் கிடையாது. ஆனால், 64 வயதிலும் 'கிண்ணென்ற' உடலோடு இருக்கக் காரணமே அவர் செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சியும் உணவுப்பழக்கமும் தான்.
ஆம். தோட்ட வேலைகளை இவரே செய்வார். ஓரிடத்தில் குழி வெட்டி பிறகு மூடி விடுவார். எதுக்குக் குழி தோண்டுகிறார் பிறகு மூடுகிறார் என்று புதுசாய் பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால், பாலய்யா வீட்டு வேலைக்காரர்களுக்கு அது பழகிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கமும் அப்பா என்.டி.ஆரிடமிருந்து எடுத்துக்கொண்டதுதான். என்.டி.ஆர் பலபடி மேல். கிணறு தோண்டும் அளவுக்கு மாதக்கணக்கில் தோண்டி பிறகு அதை மூடும் பழக்கம் கொண்டவர்.
வியர்க்க விறுவிறுக்க வேலை செய்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும் எனச் சொல்வார் பாலய்யா. ஜிம் போன்ற இடங்கள் எல்லாம் போகக்கூடாத இடம் என்று நம்பும் ஆசாமி அவர். பிள்ளைகளுக்காக வீட்டில் ஜிம் கட்டிக்கொடுத்தவர், மறந்தும்கூட அந்தப் பக்கம் போகவே மாட்டார். 'கார்டியோ' கூட ஜாக்கிங்கில் இருக்கிறது என்பதால் ஜிம் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்.
அதனால் அவர் வீட்டுக்குச் செல்லும் வி.ஐ.பிக்களுக்கு கடப்பாரையோடு அவர் தரிசனம் கிடைப்பது நிச்சயம்.
இவர் குழி தோண்டி குழி தோண்டிப் பிறகு மூடுவதைப் பார்த்து, "இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே?" என்று தோன்றினால் அதை மனதுக்குள் புதைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதே கடப்பாரையால் நம்மைக் குத்தி மேலே பம்பரம்போல சுற்றினாலும் சுற்றும் ஆபத்து இருக்கிறது.
பாலய்யா சரியான ஜாக்கிங் பிரியர். எவ்வளவு தாமதமாகத் தூங்கினாலும் 3.30 மணிக்கு எழுந்து ஜாக்கிங் போவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஜாக்கிங் போகும்போது பாட்டு கேட்பது போன்றவை செய்யவே மாட்டார். தன்னுடன் பாதுகாப்புக்காக வரும் நபருடன் பேச்சும் கொடுக்க மாட்டார். அந்த அளவுக்கு சின்ஸியர் ஜாக்கிங் மணி அவர்!
அவர் ஜாக்கிங் போகும் போது சின் சானாய் மாறி அமைதியோ அமைதி மோடுக்கு போய்விடுவார். 6 மணிவரை யோகா, பேப்பர் வாசிப்பு, டிவி செய்திகள் பார்த்தல் என ஒரு டிபிக்கல் அரசியல்வாதியாய் மாறிவிடுவார். பிரேக் பாஸ்ட்டாய் கொஞ்சம் நட்ஸ் மற்றும் ஜூஸ் மட்டுமே எடுத்துக்கொள்வார். (முன்பு அதிகாலையிலேயே முழுக்கோழி சாப்பிட்ட பழக்கமெல்லாம் இப்போது இல்லை)
தினமும் என்ன சமைக்க வேண்டும் என்று இவர் சொல்வதுதான் அன்றைய நாளின் வீட்டின் சமையல் மெனுவாக இருக்கும். அரிசியை அளவொடு எடுத்துக் கொள்வார். சினிமா ஷூட்டிங் சமயம் ஒரு நியூட்ரிசியன் கூடவே இருந்து அவுன்ஸ் கணக்கில் உணவை கேப்பில் இவருக்குக் கொடுத்துக்கொண்டிருப்பார். அவரைப் பொறுத்தவரை சீட்டிங் மீல் என்றாலே பருப்பு சாதமும் ரசமும் தான். வெறித்தனமான பருப்பு ரசிகர். பருப்புருண்டைக்குழம்பு, பருப்பு சாம்பார், பருப்பு சட்னி, பருப்பு அடை, பருப்பு வடை என பருப்பே துணை என்பதுதான் அவர் மெனு.
"பப்பு கொண்ரா!" என்று ஒரு காலத்தில் குண்டான் குண்டானாய் சோற்றில் குழைத்துச் சாப்பிட்ட மனிதர், இப்போது டயட் மெனுவால் அதைக் கொஞ்சம் கம்மியாக்கிக் கொண்டுள்ளார்.
எப்போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் விசிட்டர் அறையில் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். தன்னை சந்திக்க வரும் எவரையும் வெறும் வயிற்றோடு அனுப்புவதில்லை என்ற கறார் பாலிசியை வைத்திருக்கிறார் பாலய்யா. இதில் ஆச்சர்யமான விஷயம் இங்கு அசைவ உணவு ரகம்ரகமாக பரிமாறப்படும் என்பதுதான்.
"எல்லாஞ்சரி... 3.30 மணிக்குல்லாம் ஒரு மனுஷன் எந்திரிச்சி ஜாக்கிங் போவானா?" என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இருட்டுவதற்குள் இரவு உணவை எடுத்துக்கொண்டு 9 மணிக்கு நித்திரை கொள்ளும் ஆசாமியால் இதுகூட முடியாதா என்ன?
சில வருடங்களுக்கு முன் தன் வீட்டு விசேஷத்துக்கு வந்த பாலய்யா, பார்ட்டியில் கலந்துகொண்டு
செய்த அட்ராசிட்டியை இன்றும் ஆச்சர்யத்தோடு பலரிடம் சொல்லிகொண்டிருக்கிறார் ஓர் இயக்குநர்... வேறு யாருமல்ல... இயக்குநர் பிரியதர்ஷன் தான் அது. ஆமாம்... அப்படி என்னதான் அந்த பார்ட்டியில் செய்தார் பாலய்யா..?
(பாட்டில் திறக்கும்...)