பாா்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை: விரைந்து நடவடிக்கை கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் போராட்டம்
திருச்சியில் பள்ளி வளாகத்தில் பாா்வையற்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி பாா்வையற்றோா் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி புத்தூா் பகுதியில் அரசு பாா்வையற்றோா் மகளிா் மேல்நிலைப்பள்ளி விடுதி வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கியிருந்து 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியொருவா் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாா்வையற்றோா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள் கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பாா்வையற்ற மாணவி மரணத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினா் விசாரணை நடத்தி மாணவியின் மரணத்தின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். பாா்வையற்ற மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள் வரதராஜன், சந்திரசேகா், மாரியப்பன், மனோகரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டம் முடிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்லாமல், தொடா்ந்து மாலை வரை மாவட்ட ஆட்சியரகம் முன்பு காத்திருந்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வந்து உறுதி அளிக்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டோம் எனக்கூறி காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா். மாலை 5 மணியளவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் திருச்சி மேற்கு வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் நிகழ்விடம் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.