பிக் பாஸ் 8: முதலில் போட்டி, பிறகுதான் நட்பு! செளந்தர்யாவுக்கு சிவக்குமார் ஆறுதல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் போட்டியில்தான் கவனம் செலுத்த வேண்டும் பிறகுதான் நட்பு, உறவு எல்லாம் என நடிகை செளந்தர்யாவிடம் நடிகர் சிவக்குமார் ஆறுதல் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அணியில் பலரும் தன்னை புறக்கணிப்பதாக செளந்தர்யா வருத்தப்பட்டு அழுகிறார். அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் சிவக்குமார் இவ்வாறு தெரிவிக்கிறார்.
பொழுதுபோக்கும் செளந்தர்யா
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெஃப்ரி, ஜாக்குலின், ரயான் உடன் குழுவாகச் சேர்ந்து பொழுதுபோக்குவதாக செளந்தர்யா மீது பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெண்கள் அணியில் உள்ள போட்டியாளர்களிடமிருந்து சற்று வேறுபடுவதாக செளந்தர்யா தன்னைக் காட்டிக்கொள்வதாகவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் பெண்கள் அணியால் தனிமைப்படுத்தப்படுவதாகவும், போட்டிகளில் தான் இன்னும் முழுமையாக தனது திறமையை வெளிப்படுத்தவில்லை எனவும் செளந்தர்யா வருத்தப்படுகிறார்.
சிவக்குமார் ஆறுதல்
அழுதுகொண்டிருந்த செளந்தர்யாவுக்கு ஆறுதல் கூறும் சிவக்குமார், ''தேவையற்ற வார்த்தைகளை நான் உன்னிடம் கூறவில்லை. நீ உன்னை உணர வேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன். இதுபோன்று இன்னும் நிறைய போட்டிகள் வரும். அப்போது உன்னை வலுவாக முன்னிருத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பிக் பாஸ் போட்டி குறித்து எனக்குமே அவ்வளவு புரிதல் இல்லை. ஆனால், ஒவ்வொரு போட்டிக்கு பிறகு நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என உணர்கிறேன். நான் என்னை காப்பாற்றிக்கொள்ள என்ன முயற்சி செய்தேன் என யோசிக்கும்போது நாம் போட்டியை புரிந்துகொள்கிறோம்.
நான் என்னை இழந்துவிடக்கூடாது; போட்டியிலிருந்து வெளியேறிவிடக் கூடாது என நினைக்கும்போது நான் இன்னும் மேம்படுகிறேன் என அர்த்தம்.
நட்பு என்ற பெயரில் குழுவைச் சேர்த்துக்கொண்டு, முயற்சிகள் எடுக்காமல் பொழுதுபோக்கிக்கொண்டு இருந்தோமேயானால் நாம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம்'' எனக் கூறுகிறார்.
இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: நட்புக்கும், போட்டிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!