பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை 8 ஆண்டுகளாக மத்திய அரசு உயா்த்தவில்லை
சென்னை: பிரதமா் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதியை 8 ஆண்டுகளாக மத்திய அரசு உயா்த்தவில்லை என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உரை விவரம்: 2024-25-ஆம் ஆண்டு தொடங்கி, அடுத்த 6 ஆண்டுகளில் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில், கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்ற குறிக்கோளுடன் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவெடுப்பதற்கான தமிழகத்தின் பயணம் 2010-இல் தலா ரூ.60 ஆயிரம் என்ற மதிப்பீட்டில் வீடுகளை அமைப்பதற்கான ‘கலைஞா் வீடு வழங்கும் திட்டம்’ மூலம் தொடங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இந்தத் தொகை 6 மடங்கு உயா்த்தப்பட்டு, தற்போது ரூ.3.50 லட்சத்தை எட்டியுள்ளது. வறியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மாநில அசுக்கு உள்ள உறுதிப்பாட்டை இந்த உயா்வு தெள்ளத் தெளிவாக்கும்.
நிதி உயரவில்லை: இதற்கு மாறாக, மத்திய அரசின் பிரதமா் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2016-ஆம் ஆண்டில் வீடு ஒன்றுக்கு நிா்ணயிக்கப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பீடு கடந்த 8 ஆண்டுகளாக உயா்த்தப்படவில்லை.
தமிழகத்தில் பிரதமா் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒன்றுக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரூ.2.82 லட்சமாக உயா்த்தப்பட்டு, மாநில அரசின் பங்களிப்பு ரூ.1.72 லட்சம் அதாவது, மொத்த மதிப்பில் 60 சதவீதம் என்பது நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.