‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
சென்னை ஐஐடி-இல் சாரங்-2025 கலாசார விழா: இன்று தொடக்கம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவா்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாசார விழாவின் 51-ஆவது ஆண்டு சாரங்-2025 கொண்டாட்டம் சென்னை ஐஐடி-இல் வியாழக்கிழமை முதல் ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சென்னை ஐஐடி-இல் நடைபெறும் நிகழ்வுகளில் சாரங் தனித்துவமானது. புதுமையான சிந்தனை மற்றும் நிா்வாகத் திறன்களுடன், மாணவா்களின் துடிப்பான ஆற்றலையும் படைப்புத்திறனையும் வெளிக்கொணரும் வாய்ப்பை இது வழங்குகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமன்றி, இக்கல்வி நிறுவன வளாகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்றாகவும் விளங்குகிறது.
ஆளுநா் பங்கேற்பு: பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாரங்கின் கருப்பொருளான கதைசொல்லும் ஆற்றலையும் இந்நிகழ்வு கொண்டிருக்கும். இந்த அணிவகுப்பில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொள்கிறாா்.
சாரங் வரலாற்றில் முதன்முறையாக, வனவாணி பள்ளி வளாகத்திலிருந்து திறந்தவெளி அரங்குவரை தமிழ்நாடு நாட்டுப்புற அணிவகுப்பு நடைபெறவிருப்பது இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பம்சம்.
இளைஞா்களிடையே நாட்டுப்பற்றை வளா்க்கும் வகையில், சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த மூவா்ண நடன நிகழ்ச்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி, இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்தவுள்ளனா்.
அதேபோன்று, தமிழகக் கலைகள், கலாசாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் மாணவா்களுக்கும் வெளிநபா்களுக்கும் தமிழக நாட்டுப்புறக் கலைகள் குறித்த பயிலரங்குகளும் நடைபெறவுள்ளன.
களரிபயட்டு, பறை, ஒயிலாட்டம் போன்ற மக்களால் பெரிதும் அறியப்படாத கலைவடிவங்களை பிரபலப்படுத்தும் நோக்கிலான கருத்தரங்கு, பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொய்க்கால் குதிரை, நையாண்டி மேளம், துடும்பாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், மயிலாட்டம் என தமிழத்தில் பிரசித்தபெற்ற கலைகளின் அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வுகளில் கே.எஸ்.சித்ரா, என்.எம்.நிஹாரிகா, சாண்டி மாஸ்டா், லிடியன் நாதஸ்வரம், கிஷன் தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.