அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை
பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு
பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் மாறி மாறி சாடி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
நேற்று முதல் பீகாரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல் காந்தி பேசியதாவது,
பீகாரில் ராகுல் காந்தி, "மோடிக்கு உங்களுடைய வாக்குகள் வேண்டும். நீங்கள் அவரை நடனமாடச் சொன்னால் கூட, உங்கள் வாக்குகளுக்காக அவர் அதை செய்வார். அந்தக் கூட்டணி உங்களுடைய வாக்குகளைத் திருடப் பார்க்கிறது. ஏனெனில், அவர்களுக்கு இந்தத் தேர்தல் நோயை நிறுத்த வேண்டும்.
அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களையும் திருடினார்கள். அதை பீகாரிலும் செய்ய முயல்வார்கள்" என்று பேசியிருந்தார்.
பாஜகவின் எதிர்ப்பு
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, "ராகுல் காந்தி லோக்கல் ரௌடி போல பேசுகிறார். ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து ஏழை மக்களையும், பீகாரில் பிரதமர் மோடிஜிக்கு வாக்களித்தவர்களையும் அவமானப்படுத்தி உள்ளார்.
ராகுல் காந்தி வாக்காளர்களையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் பேச்சு
தேர்தல் பிரசாரத்தில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, 'ஜனதா தளம் தலைவர் நித்திஷ் குமார் பாஜகவால் இயக்கப்படுகிறார்' என்று விமர்சித்திருந்தார். இதுவும் நிதிஷ் குமாரின் உடல்நிலையை தேஜஸ்வி யாதவ் கிண்டல் செய்வதாக சர்ச்சையாகி உள்ளது.














