90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை
ஒரு இந்தியப் பெண் கிரிக்கெட்டைத் தன் கனவாகத் தேர்ந்தெடுக்கும்போது, அவள் எதிர்கொள்வது வெறும் பந்துகளை மட்டுமல்ல சமூகத்தின் பார்வைகள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், பொருளாதாரச் சுமைகள், மற்றும் தன்னம்பிக்கை மீதான சோதனைகள் ஆகியவற்றையும்தான்.
இது வெறும் விளையாட்டுப் பயணம் அல்ல; தன் கனவை உலகத்தின் முன் நிரூபிக்கும் போராட்டம்.
பெண்கள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கும்போது அவர்களின் முதல் போராட்டமே குடும்பத்திடம்தான். அந்தக் குடும்பம் ஆதரித்தால், தனது திறமைகளை நிரூபிக்கக் களம் கிடைத்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதை கண்முன் சாதித்துக் காட்டியிருக்கிறார் 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை பிரதிகா ராவல்.

நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் அரையிறுதிக்குச் செல்வதற்கான முக்கிய போட்டியில் நியூசிலாந்துக்கெதிராக அவர் அடித்த 122 ரன்கள் சாதாரணமானதல்ல, அது டெல்லி அகாடமி மைதானங்களில் சிறுவர்களுடன் பயிற்சி செய்தது முதல் அடுத்தடுத்து தன்மீதான சவால்களை வென்ற ஒரு இளம் வீராங்கனையின் மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.
கிரிக்கெட் உலகில் அவரின் இந்த மின்னல் வேக எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் சவால்கள் நிறைந்த வாழ்க்கையும், அவரின் அயராத உழைப்பும்தான் அவருக்கு உந்துசக்தி.
பிரதிகா ராவல், செப்டம்பர் 1, 2000 அன்று டெல்லியில் பிறந்தார். பிரதிகாவுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் டெல்லியில் அவரது குடும்பத்தின் ஆதரவுடன் தொடங்கியது.
அவரது தந்தை பிரதீப் ராவல் BCCI லெவல்-II நடுவர். தனது நிறைவேறாத கிரிக்கெட் கனவை மகளின் மூலம் நிறைவேற்ற விரும்பிய அவர், பிரதிகாவுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே பேட் பிடிக்கக் கற்றுக்கொடுத்தார்.
வீட்டிலேயே வலைகள் அமைத்துத் தன் மகளுக்குத் தீவிர பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
பின்னர் பிரதிகா தன் 10 வயதில் ரோத்தக் ரோடு ஜிம்கானா கிரிக்கெட் அகாடமியில் முறையாகக் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார்.

அந்த அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் பெண் பிரதிகாதான். சிறுவர்களுடன் இணைந்து பயிற்சி எடுத்ததால், வேகமான பந்துகளை எதிர்கொள்ளும் திறன் சிறு வயதிலேயே வளர்ந்தது.
14 வயதிலேயே 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம்பெற்றார்.
மறுபுறம் பள்ளிக் கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புத் தேர்வில் 92.5 சதவிகித மதிப்பெண் பெற்றார். டெல்லி ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் உளவியல் பட்டப் படிப்பை முடித்தார்.
அதேவேளையில் கூடைப்பந்து போட்டியிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். 2019-ல் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்தில் தங்கப் பதக்கமும் வென்றார்.
சொல்லப்போனால் 2020 வரை கிரிக்கெட்டைவிட கூடைப்பந்தில் அதிகம் கவனம் செலுத்தினார்.
ஆனாலும், கிரிக்கெட் மீது விலகாத பார்வைகொண்ட பிரதிகா, உள்நாட்டுத் தொடரான சீனியர் மகளிர் ஒருநாள் கோப்பை தொடரின் 2021-22 சீசனில் அஸ்ஸாம் அணிக்கெதிராக டெல்லி அணியில் நாட் அவுட் வீராங்கனையாக அவர் அடித்த 161 ரன்கள், அவரது திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டியது.
அடுத்து 2023-24 சீசனில் 8 போட்டிகளில் 68.5 ஆவரேஜில் 411 ரன்கள் அடித்து தன் திறமையை மேலும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

தேசிய அணியின் அழைப்பை எதிர்பார்த்திருந்த பிரதிகாவுக்கு, சவாலான காத்திருப்புக்கு மத்தியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
தனது 24-வது வயதில், 2024 டிசம்பர் 22 அன்று சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்த பிறகு, பிரதிகாவின் பயணம் அசுர வேகத்தில் இருந்தது.
முதல் போட்டியில் 40 ரன்களில் அவுட்டாகி அரைசதம் மிஸ் ஆனாலும், அடுத்த போட்டியிலேயே அரைசதமடித்தார் பிரதிகா.
அடுத்து அயர்லாந்துக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதமடித்த பிரதிகா கடைசி போட்டியில் தனது ஒ.டி.ஐ கரியரின் அதிகபட்ச ஸ்கோராக 154 ரன்கள் பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து, இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா முத்தரப்பு தொடரில் தனது முதல் இரு ஆட்டங்களில் அரைசதமடித்த பிரதிகா, தான் அறிமுகமான முதல் 8 போட்டிகளில் 5 அரைசதம், ஒரு சதம் உட்பட 500 ரங்களுக்கு மேல் குவித்தார்.
இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

அடுத்தடுத்து அவரின் நிலையான ஆட்டம், முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் அவரை இடம்பெற வைத்தது.
உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்தியா அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்வியடையவே அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற நெருக்கடிக்குள்ளானது.
அப்படி அடுத்த போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் முக்கியமான போட்டியில், நியூசிலாந்துக்கெதிராக ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 212 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, தனியாக 122 ரன்களும் அடித்து இந்தியா அரையிறுதிக்குச் செல்வதை உறுதி செய்தார்.
மேலும், அதேபோட்டியில் ஒ.டி.ஐ கரியரில் தனது 1,000 ரன்களையும் கடந்தார். இதன் மூலம், 23 போட்டிகளிலேயே 1,000 ரன்களைக் கடந்த 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிண்ட்சே ரீலரின் 37 வருட சாதனையை சமன் செய்தார்.
இத்தகைய சாதனைகளோடு இந்திய அணியின் அரை நூற்றாண்டு உலகக் கோப்பைக் கனவை நிறைவேற்றத் துடிப்பாக இருந்த பிரதிகாவுக்கு, வங்கதேசத்துக்கெதிரான கடைசிப் போட்டியில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் தொடரிலிருந்தே விலக நேர்ந்தது.

காயத்தால் வெளியேறிய பிறகு அவர் உதிர்த்த வார்த்தைகள்...
இந்த நேரத்தில் பிரதிகாவை நிச்சயம் இந்திய அணி மிஸ் பண்ணும். உலகக் கோப்பையில் இந்திய அணியில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த பிரதிகாவின் காயத்துக்கு மருந்து இந்தியா கோப்பை வெல்வதுதான்.
இந்தக் காயத்தால் வெளியேறினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து மேலும் பல சாதனைகள் படைத்து உங்களின் கைகளில் உலகக் கோப்பையை ஏந்த வாழ்த்துகள் பிரதிகா!















