வீடியோ கால் டு லாட்ஜ்; திருமணம் தாண்டிய உறவு.. பாட்டி கொலை.. தப்பித்த கணவன் - கா...
Kantara Chapter 1: சவால்களைத் தாண்டி திரைக்கு வந்த `காந்தாரா சாப்டர் 1' உருவான கதை
`காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கடந்த அக்டோபர் 2- தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.
இயற்கை வளங்கள் நிறைந்த காந்தாராவுக்கும் கடம்ப சாம்ராஜ்யத்திற்கும் இடையான கதையை இந்தப் பாகத்தில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி சொல்லியிருந்தார்.
இத்திரைப்படம் இன்று ஓடிடி-யில் வெளியாகிறது.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த பிரமாண்ட கன்னட சினிமா பல சவால்களைத் தாண்டிதான் உருவாகியிருக்கிறது.
முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் இரண்டாம் பாகத்திற்கான திட்டத்தை வெகு சீக்கிரமாகவே செயல்படுத்திட எண்ணினார் ரிஷப் ஷெட்டி.
ஆனால், முதல் பாகத்தை வெற்றியடையச் செய்த மக்களையும் எந்தவிதத்திலும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்திருக்கிறார்.

இயக்குநர் ரிஷப் ஷெட்டி பிறந்து வளர்ந்த கெரடி என்ற கிராமத்தில் பூதகொலா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுமாம். ரிஷப் ஷெட்டி, பஞ்சுருளி தெய்வத்தின் மீது அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார். தான் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த விஷயங்களை படமாக எடுக்க யோசித்துதான் `காந்தாரா' படத்தை எடுக்கத் தொடங்கினார் ரிஷப் ஷெட்டி.
சவால்களைத் தாண்டி திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உருவான கதை குறித்தும், அப்படத்திற்காக படக்குழுவினர் சந்தித்த சவால்கள் குறித்தும் இங்கு பார்ப்போமா....
* இந்தக் கதையை முழுமையாக கோப்பதிலே பல சவால்கள் எழுத்தாளராக ரிஷப் ஷெட்டிக்கு வந்ததாம். ஏனெனில், இதற்கு முந்தைய பாகத்தில் நிகழ் காலத்தில் நடக்கும் கதையைச் சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் பாகத்தில் பீரியட் கதையை தொட்டிருந்தார் ரிஷப். நியாயம் சேர்க்கும் வகையில் திரைக்கதையை எழுதுவது முதல் நாளிலிருந்து சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார் ரிஷப் ஷெட்டி.
* கடம்ப சாம்ராஜ்யத்தைப் பற்றிக் கிடைத்த புராணக் கதைகளை வைத்து இந்த உலகத்தைக் கட்டமைப்பதும் படக்குழுவினருக்கு சவாலாக இருந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அந்தக் காலகட்டத்தை தொழில்நுட்ப உதவியுடன் கண் முன் நிறுத்துவதும் படக்குழுவினருக்கு சேலஞ்சிங் டாஸ்க்தானாம். ஏனெனில், கடம்ப மன்னர் காலத்து ஓவிய ரெபரென்ஸ்கள் குறைவாகவேதான் படக்குழுவினருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், கற்பனையாக விஷுவலில் கடம்ப சாம்ராஜ்யத்தைக் கொண்டு வருவது கடினமானதாக இருந்திருக்கிறதாம்.

* பீரியட் படங்களில் எப்போதுமே கலை இயக்குநருக்கும், ஆடை வடிவமைப்பாளருக்கு அதிகப்படியான வேலைகள் இருக்கும். இப்படத்திற்கு ரிஷப் ஷெட்டின் மனைவி பிரகதி ரிஷப் ஷெட்டிதான் ஆடை வடிவமைப்பாளர். இந்தப் படத்திற்காக மட்டும் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடைகளை வடிவமைத்திருக்கிறாராம்.
* படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ரிஷப் ஷெட்டியின் சொந்த ஊரான கெரடியில் நடந்திருக்கிறது. களரி, வாள் சண்டை என இந்தப் படத்திற்காக பல கலைகளையும் ரிஷப் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
* ரிஷப் ஷெட்டி படத்தை இயக்கிக்கொண்டே நடித்திருக்கிறார். இப்படியான பிரமாண்ட படத்தில் இரண்டு வேலைகளையும் கவனிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், தொடர்ந்து முழு படப்பிடிப்பிலும் சோர்வின்றி இயங்கி இருக்கிறார் ரிஷப். ஓய்வு என எதைப் பற்றியும் சிந்திக்காமல் தொடர்ந்து இயங்கி வந்த ரிஷப் ஷெட்டிக்கு க்ளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் கால் வீக்கம் ஏற்பட்டு, உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்படியான உடல்நிலையிலும் அவர் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்.
* படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது நான்கு - ஐந்து முறை மரண விளிம்பிலிருந்தும் தப்பித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

* கர்நாடகாவிலுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளிலும் படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சில விதிகளை விதித்திருக்கிறார்கள். விதிகளை மீறியதற்காக படக்குழுவினருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
* கடந்தாண்டு நவம்பர் மாதம், படக்குழுவினரை அழைத்துச் சென்ற பஸ் விபத்திற்கு உள்ளானது. அந்த விபத்தில், படக்குழுவினர் அனைவரும் காயமின்றி தப்பித்தனர். இந்த விபத்தினால் படப்பிடிப்பும் தடைப்பட்டது. இதைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது படத்தில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் ஆற்றில் மூழ்கி இறந்தார். இதனாலும் சில நாட்கள் படப்பிடிப்பு தடைபட்டது.














