Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்
Big Boss 12: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்; பிக்பாஸுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் கர்நாடகா அரசு
கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கன்னட பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான தகவலில், பிக் பாஸ் கன்னடா 12' நிகழ்ச்சிக்கான செட் பிடாடி தொழில்துறை பகுதியில் உள்ள ஜாலி வுட் ஸ்டுடியோஸ் & அட்வென்ச்சர்ஸில் அமைந்துள்ளது.

கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடகா முழுவதும் அதிக பார்வையாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், படப்பிடிப்பு நடக்கும் ஸ்டூடியோவில் கழிவுகள் மற்றும் கழிவுநீர் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன.
அப்போதுதான் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஸ்டூடியோவின் சுற்றுப்புறங்களில் வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிகேவைச் சேர்ந்த ஆர்வலர்கள், ஸ்டூடியோ முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அரசு அதிகாரிகள் பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை நடந்து வரும் படப்பிடிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி திடீரென இடையில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக கலர்ஸ் கன்னடத்தின் எக்ஸ் பக்கத்தில், ``எதிர்பாராத காரணங்களால், ஜியோ ஹாட்ஸ்டாரில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் ஒளிபரப்பு நேரத்தில் இடையூறு ஏற்பட்டது.
இந்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இன்றைய எபிசோட் இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் (sic) பார்க்கக் கிடைக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையில், கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த ஸ்டூடியோவை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின் முடிவில், `நிகழ்ச்சியின் தயாரிப்புக் குழு, `250 KLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) நிறுவப்பட்டிருக்கிறது' எனக் கூறியது.
ஆனால் அந்த வசதி செயல்படாமல் இருப்பதையும், முக்கிய வடிகால் இணைப்புகள் இல்லாததையும் கண்டறிந்தோம்.
பிளாஸ்டிக் கப் மற்றும் காகிதத் தகடுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் முறையாக வரிசைப்படுத்தப்படவில்லை.
இரண்டு பெரிய டீசல் ஜெனரேட்டர்கள் தளத்தில் இயங்குகிறது. இந்த ஜெனரேட்டர்கள் தளத்தின் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநில மற்றும் தேசிய விதிமுறைகளை மீறும் செயல். இதற்கு அவசர நடவடிக்கைகள் தேவை.
எனவே கன்னட பிக் பாஸின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்" என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில்தான், அரசு குறிப்பிட்ட அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை, 'பிக் பாஸ் கன்னட 12' வீட்டில் படப்பிடிப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.