மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்...
சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
விலை மதிப்புமிக்க பொருட்களை கோயில் வளாகத்திலேயே பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தது கேரள ஐகோர்ட். மேலும், அந்தத் தங்க கவசங்கள் சபரிமலைக்குக் கொண்டுவரப்பட்டன.
இதற்கிடையே தங்க கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைந்ததாகச் சர்ச்சை எழுந்தது. மேலும், 1999-ம் ஆண்டு விஜய் மல்லையா சபரிமலை கோயிலுக்கு வழங்கிய சுமார் 30 கிலோ தங்கத்தில் கோயிலின் மேல்பகுதிகளிலும், துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களிலும் தங்கம் பதிக்கப்பட்டன.
அதே சமயம் 2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலைகளுக்கு தங்கம் பதிப்பதற்காக சென்னைக்குக் கொண்டுசென்றார். அப்போது சபரிமலையிலிருந்து கொடுத்தனுப்பப்பட்ட கவசங்கள் சுமார் 39 நாட்களுக்குப்பின் சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

'விஜய் மல்லையா வழங்கிய தங்கத்தில் துவார பாலகர்கள் சிலைகளுக்கும் தங்கம் பூசப்பட்ட நிலையில், மீண்டும் தங்கம் பூசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. 1999-ம் ஆண்டு செம்பு கவசங்கள் மீது பூசப்பட்ட தங்கம் 2019-ல் ஆவியாகி விட்டதா?' என்ற விமர்சனங்கள் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு எதிராக எழுப்பப்பட்டன.
இதையடுத்து சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவனம் தங்களிடம் செம்பு கவசங்கள்தான் வழங்கப்பட்டன எனவும், நாங்கள் தங்கம் பதித்து அனுப்பி வைத்தோம் எனவும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்த கிரைம் பிரான்ச் குழுவை நியமித்தது கேரள ஐகோர்ட். மேலும், தேவசம் விஜிலென்ஸ் அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்திவருகின்றனர்.

விஜிலென்ஸ் விசாரணையில் 2019-ம் ஆண்டு சபரிமலை அட்மினிஸ்டிரேட்டிவ் ஆப்பீசராக இருந்த முராரி பாபு என்பவர் துவாரபாலகர் கவசங்களை அனுப்பி வைத்தது தெரியவந்தது. அவர் தற்போது திருவிதாங்கூர் தேவசம்போர்டு துணை கமிஷனராக உள்ளார்.
மேலும் அன்றைய திருவாபரணம் கமிஷனராக இருந்த பைஜூ, எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசராக இருந்த சுதீஷ் ஆகியோருக்கும் இதில் பங்கு இருப்பதாக தேவசம் விஜிலென்ஸ் கண்டுபிடித்துள்ளது. பைஜூ, சுதீஷ் ஆகியோர் ஏற்கனவே பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்த நிலையில் தங்க கவசங்களை செம்பு கவசங்கள் என மோசடியாக ரெஜிஸ்டரில் பதிவுசெய்த அதிகாரி முராரிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கவசங்கள் மீது இருந்த தங்கம் என்ன ஆனது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல்போன விவகாரத்தில் முதன் முதறையாக அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.