TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து - நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க ம...
Instagram: "ரகசியமாக ஒட்டுக் கேட்கவில்லை; ஆனால்" - நீங்கள் பேசுவது விளம்பரமாக வர இதுதான் காரணம்
ஏதேனும் பொருள் அல்லது சேவை குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கையில் அடுத்த சில நிமிடங்களிலேயே நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுகுறித்த விளம்பரங்கள் தோன்றும், பலரும் இதனை அனுபவித்திருப்போம்.
இது தற்செயலானதா அல்லது இன்ஸ்டாகிராம் நமது உரையாடல்களை ரகசியமாக ஒட்டுக் கேட்கிறதா என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே பயனர்களிடையே இருந்து வருகிறது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இன்ஸ்டாகிராம் தலைமை அதிகாரி ஆடம் மொசெரி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் செயலி, பயனர்களின் உரையாடல்களைக் கேட்டு அதற்கேற்ப விளம்பரங்களைக் காட்டுவதில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் ஆடம் மொசெரி வெளியிட்ட வீடியோ ஒன்றில், "உங்கள் உரையாடல்களை நாங்கள் கேட்பதில்லை. விளம்பரங்களுக்காக உங்கள் போனின் மைக்ரோஃபோனை நாங்கள் பயன்படுத்துவதில்லை.
ஒருவேளை இன்ஸ்டாகிராம் அவ்வாறு செய்தால், அது பயனர்களின் தனியுரிமையை மீறும் செயல். போனின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும், மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் திரையிலேயே தெரியும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் நாம் பேசிய பொருள்கள் தொடர்பான விளம்பரங்கள் எப்படித் தோன்றுகின்றன? என்பதற்கான சில காரணங்களையும் மொசெரி விளக்கியிருக்கிறார்.
மொசெரி, ”ஒரு பயனர், விளம்பரங்களில் வரும் ஒரு பொருளை 'டேப்' செய்தாலோ அல்லது அதுகுறித்து ஆன்லைனில் தேடியிருந்தாலோ, அது தொடர்பான விளம்பரங்கள் அவருக்குக் காட்டப்படும்.
பல்வேறு நிறுவனங்கள் தங்களின் இணையதளங்களைப் பார்வையிட்ட பயனர்களின் தகவல்களை இன்ஸ்டாகிராமுடன் பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலமும் அந்தப் பயனர்களுக்குத் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களைக் காட்ட இன்ஸ்டாகிராம் உதவுகிறது.
சில நேரங்களில், நீங்கள் ஏற்கனவே கடந்து சென்ற ஒரு விளம்பரம் உங்கள் ஆழ்மனதில் பதிந்திருக்கும். பின்னர் அது குறித்து நீங்கள் பேசும்போது, அந்த விளம்பரம் உங்கள் உரையாடலுக்குப் பிறகு வந்தது போல் தோன்றும். ஆனால் உண்மையில் நீங்கள் அதை முன்பே பார்த்திருப்பீர்கள்.
இறுதியாக, சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் எந்தக் காரணமும் இன்றி முற்றிலும் தற்செயலாக நடக்கலாம்” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.