Big Boss 12: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்; பிக்பாஸுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும்...
சென்னை: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; பின்னணி என்ன?
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார் துல்கர் சல்மான். கடந்த மாதம் அவர் தயாரிப்பில் வெளியான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக தொகை வசூல் செய்த படமாகச் சாதனை படைத்தது.
இதனிடையே கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையில் அவரின் இரண்டு சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறை நடத்திய ஆபரேஷன் நம்கூர் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனைகள் நடந்துள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட கார்களை வழங்கக் கோரி துல்கர் சல்மான் தொடுத்த வழக்கில், அவர் சுங்க அதிகாரிகளை அணுக அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில், இன்று சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் பிருத்விராஜ், மம்முட்டி வீடுகளில் சோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்நாடு, கேரளாவில் வரி செலுத்தாமல் கார்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக மேலும் சில இடங்களில் சோதனை நடத்துகிறது அமலாக்கத்துறை. மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
துல்கர் சல்மான் வீட்டில் காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.