கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
``20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றபோது..." - அடூர் கோபாலகிருஷ்ணன்
சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது.
பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது.

மலையாள சினிமாவிலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் மோகன்லால்தான்.
இதற்கு முன் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருது கிடைத்திருந்தது. நேற்றைய தினம் கேரள மாநில அரசு விருது பெற்ற மோகன்லாலுக்கு பாராட்டு விழா நடத்தியிருந்தது.
இந்த விழாவில் அடூர் கோபாலகிருஷ்ணனும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றபோது இப்படியான கொண்டாட்டங்களோ, பொதுமக்களின் பாராட்டுகளோ கிடைக்கவில்லை.
இன்று, கேரள அரசு மோகன்லாலை அங்கீகரிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறது. இதில் நானும் உங்களுடன் மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
மோகன்லாலுடன் இதுவரை பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவரது திறமையை நான் எப்போதும் ஆழமாக மதித்து, பாராட்டி வந்திருக்கிறேன்.

எனது தலைமையில்தான் மோகன்லால் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். அங்கிருந்துதான் அவரது தேசிய அங்கீகாரப் பயணம் தொடங்கியது, இதில் நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
ஒவ்வொரு மலையாளியும் மோகன்லாலில் தங்களைக் கண்டிருக்கிறார்கள். அதனால்தான், மலையாளிகள் வாழும் எந்த இடத்திலும் அவர் அனைவராலும் பிரியமானவராக மாறியிருக்கிறார்.
அவருக்கு தொடர்ந்து வெற்றியும், திரைத்துறையில் நீண்ட, நிலையான வாழ்க்கையும் அமைய வாழ்த்துகிறேன்,” எனப் பேசினார்.