கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
நீலகிரி: மக்கள் கூடும் இடங்களில் பெண்களை பாதுகாக்க பிங் பேட்ரோல் அறிமுகம்! - விவரம் என்ன?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிங்க் ரோந்து வாகனத்தை நீலகிரியில் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கிறது காவல்துறை.

மக்கள் கூடும் இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட இருக்கிறது காவல்துறையின் சிறப்புக்குழு.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் , "பிங்க் பேட்ரோல் என்ற பெயரில் பெண் காவலர்கள் குழு அடங்கிய சிறப்பு இருசக்கர ரோந்து வாகன திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் 11 முற்பகல் மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் அதிகம் கூடும் இடங்களான நகராட்சி மார்கெட் உழவர் சந்தை,

பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களில் இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பிங்க் நிற ஸ்கூட்டரில் பிங்க் நிற கோட் அணிந்து ரோந்து வரும் இவர்கள் ஒலி பரப்பி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் அந்த பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு அந்த பகுதிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் ஈவ்டீசிங் போன்ற தொந்தரவுகளில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

மாணவிகள் தைரியத்துடன் செயல்பட இந்த பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி நகரம் 3, ஊட்டி ஊரகம் 2, குன்னூர் 2, கோத்தகிரி 1, கூடலூர்- 2 என தற்போது மொத்தம் 10 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.