எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!
"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!
கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. பாஜக எம்.பிக்களின் விசாரணைக் குழுவும் தனியாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்திருந்தனர்.
இதற்கிடையில் அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய அமமுக டிடிவி தினகரன், "கரூர் சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டார். தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனா, N. ஆனந்த், நிர்மல் குமார் தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இது விஜய்யின் தவெகவினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. இதில் விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன், திமுக அரசுக்கு ஆதராவகப் பேசுகிறார் என்று சலசலப்பு ஏற்பட்டது. இன்று செய்தியாளர் சந்திப்பில் இதற்குப் பதிலளித்திருக்கும் டிடிவி தினகரன், "கரூர் கூட்ட நெரிசல் என்பது எதிர்பாராமல் நடந்த விபத்து. அரசியல் கட்சிகளையும், அரசையும் மாறி மாறி குறைகூற முடியாது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டும்.

இந்த அசாம்பாவிதம் விஜய்யின் பிரசாரத்தில் நடந்திருப்பதால் அவர் தார்மீகமாக அந்தப் பொறுப்பை ஏற்பதுதான் நியாயம். அதற்காக அவர்தான் அந்த சம்பவத்திற்கு காரணம் என்று அர்த்தமில்லை. விஜய் பொறுப்பேற்று பேசியிருந்தால் நீதிமன்றம் இப்படி கண்டித்திருக்காது என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன்.
விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதில் நான் திமுக அரசுக்கு ஆதரவாகும், விஜய்க்கு எதிராகவும் பேசவில்லை. நியாயமான விஷயத்தை கூறினால், முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.

ஆனால் இந்தச் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதுதான் தவறானது. கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உயிரிழப்பு நேரத்தில் நரித்தனமாக இப்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை கண்டிக்கிறோம். தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவர ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி பழி போடுகிறார். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது" என்று பேசியிருக்கிறார்.