80s Stars Reunion: சரத்குமார் முதல் குஷ்பு வரை - சினிமா பிரபலங்களின் கெட் - டுகெ...
"சினிமா கனவுடன் மெட்ராஸ் போனேன்; ஆனால்" - மோகன் லால் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!
இந்த ஆண்டு 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன் லால் தாதா சாகேப் விருதைப் பெற்றார்.
இதைக் கொண்டாடும் விதமாக கேரள அரசு, திருவனந்தபுரத்தில் மாபெரும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த விழாவில் பேசிய மோகன் லால், "நான் விருது பெற்ற தருணத்தை விடவும், என் சொந்த ஊர், நான் பிறந்து வளர்ந்த மண்ணில் இப்போது நின்று இந்தப் பாராட்டுகளையும், அன்பையும் பெறுவது உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. இந்த மண்ணின் காற்று, அதன் கட்டடங்கள், அதன் நினைவுகள் என் ஆன்மாவில் கலந்திருக்கிறது.
48 ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாத காலத்தில், நானும் என் நண்பர்கள் சிலரும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று கனவு கண்டோம். நான் சினிமா கனவுடன் தைரியமாக மெட்ராஸுக்குப் போனேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் நண்பர்கள் என்னுடைய போட்டோவை இயக்குநர் பாசில் சாருக்கு அனுப்பிவிட்டார்கள். அப்படித்தான் 'manjil virinja poovu' மூலம் அறிமுகமானேன். இப்போது 'Drishyam 3' படப்பிடிப்பில் கேமரா முன்னாடி நிற்கும்போது அந்த நினைவுகள் எல்லாம் வந்து போனது.
நான் மரத்தில் இருந்து விழுந்த சிறிய இலை. காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்த என்னை திறமைமிக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் மற்றும் மலையாளிகள் வழிகாட்டி சரியான இடத்தை நோக்கிப் பயணப்பட வைத்தனர். அந்தப் பயணம்தான் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதெல்லாம் என்மீது எனக்கே சந்தேகம் வந்து, தடுமாறுகிறேனோ அப்போதெல்லாம் 'லாலெட்டா' என்ற உங்களின் அன்பு குரல்கள்தான் என்னை ஊக்கப்படுத்தி முன்னே கூட்டிச் செல்கின்றன.
ஒரு நடிகன் என்பவன் இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களால் வடிவமைக்கப்படும் களிமண்ணைப் போன்றவன். என் வாழ்வில் நான் வெற்றியையும், கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். நான் இரண்டையும் சமமாகவே பார்க்கக் கற்றுக் கொண்டவன்.
ரசிகர்கள் இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது. இந்த அங்கீகாரம் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தம். நான் சரியும் போதெல்லாம் யாராவது ஒருவர் என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். என் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் ஆதரவையும் இந்தத் தருணத்தில் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். ஒவ்வொரு மலையாளியின் பெருமையாக நான் இங்கே நிற்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் மோகன் லால்