Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு
`செங்கோட்டையன் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் எனில்.!’ - மூவர் சந்திப்பின் பின்னணி என்ன?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தநிலையில் இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்திருக்கின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இவர்களின் சந்திப்பு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு
செங்கோட்டையன் + பன்னீர் செல்வம் + டிடிவி தினகரன் சந்திப்பின் நோக்கம் என்ன என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் பேசினோம்.
"இந்த சந்திப்பில் ஓபிஎஸ், டிடிவி தினகரனின் சந்திப்போ, இணைப்போ ஆச்சரியம் இல்லை.
இன்று நடந்ததில் முக்கியமான ஒரு விஷயம் செங்கோட்டையனின் இணைப்பு தான்.
கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் தான் எடப்பாடி செங்கோட்டையனை நீக்கி இருந்தார்.
எம்.எல்.ஏ பதவியில் இருப்பதால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது.
தயாராகும் செங்கோட்டையன்
ஓபிஎஸ், டிடிவி உடன் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சிக்கு போனால் எடப்பாடி என்ன நடவடிக்கை எடுப்பார் என்று செங்கோட்டையனுக்கு தெரியும்.
இனி நம்மை கட்சியில் இருந்து நீக்கினால் கூட ஆச்சரியம் இல்லை என்று கருதியதால் தான் செங்கோட்டையன் வெளிப்படையாக இப்படி ஒரு சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார்.
இப்படி ஒரு முடிவை எடுக்க செங்கோட்டையன் தயாராகி இருக்கிறார் என்றால் அவர் ஏதோ ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தம்.

எடப்பாடிக்கு புகுத்தும் பாடம்
இவர்கள் மூவரும் சேர்ந்து தேவர் குரு பூஜைக்கு சென்றதைப் பார்க்கும்போது, எடப்பாடி இந்த சமுதாயத்தை எதிர்க்கிறார். அவருக்கு நாம் பாடம் புகுத்த வேண்டும் என்ற மறைமுக செய்தியை இந்த நிகழ்ச்சி மூலமாக ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதேபோல் செங்கோட்டையன் வேறு சமூதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட இந்த நிகழ்வுக்கு அவர் வந்திருப்பதைப் பார்த்தால், `அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் எடப்பாடி என்னை ஒதுக்கி வைக்கிறார்’ என அந்த சமூகத்தின் மக்கள் மனதில் அவர் பதிய வைப்பார்.
இந்த மூவரும் இணைந்து செயல்படும் காட்சி தொடர்ந்தால் ஒட்டுமொத்த அதிமுகவிற்கும் ‘நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் எடப்பாடி தடுக்கிறார்’ என்ற இந்த செய்தியைப் புகுத்துவார்கள். இதற்கு பலன் இருக்குமா? என்று நமக்கு தற்போதைக்கு தெரியாது.
டிடிவி தினகரன்
பாஜக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று நமக்கு இன்னும் தெரியவில்லை.
டிடிவியை திரும்ப தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணம் நிர்மலா சீதாராமன் தொடங்கி அண்ணாமலை வரைக்கும் இருக்கிறது.
அதற்கான வேலைகளை அவர்கள் திரைக்கு பின்னால் செய்துக்கொண்டிருக்கின்றனர்.

மூவர் கூட்டணி
ஆனால் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் டிடிவி உறுதியாக இருக்கிறார்.
இப்படி இருக்கையில் தற்போது செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் மூவரும் சேர்ந்தால் தேர்தலில் தனித்து நிற்க வாய்ப்பு இருக்கிறது.
அல்லது விஜய்யுடன் இணைவார்கள். அரசியலில் எதுவும் சாத்தியம்தான். இவர்கள் மூவரும் இணைந்து என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள். அது அதிமுக தொண்டர்களிடம் எந்த அளவிற்கு எடுபடும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சூழல்கள் தான் இந்த மூவரின் பயணத்தைத் தீர்மானிக்கும்” என்றார்.

















