Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு
குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒன்றாக காரில் வந்துள்ளனர். இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினதினகரன் உடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஐயா அவருடைய சன்னதியில் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் நின்று மீண்டும் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவுடைய ஆட்சியை தமிழகத்திலே நிறுவிட வேண்டும் என்ற சபதத்தை இன்றைக்கு மேற்கொண்டிருக்கின்றோம்" என்றார்.
டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். துரோகத்தை வீழ்த்துவதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை ஓயாது. சின்னம்மாவால் (சசிகலா) இன்னும் வந்துசேர முடியவில்லை. அவர் மனதளவில் எங்களோடு இணைந்திருப்பார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு எதிரி இல்லை. எடப்பாடி, திமுகதான் எங்களுக்கு எதிரி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எடப்பாடி என்கிற துரோக மனிதர்தான் எதிரி. வேறு யாரையும் நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை." எனப் பேசியுள்ளார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பேசிய அவர், "1952 முதல் 2004 வரை எட்டு முறை இந்த SIR நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகளுக்கு பிறகு பீகாரில் நடத்தப்பட்டபோது அதில் பல்வேறு முறைகேடுகள், புகார்கள், வாக்கு திருட்டு என்றெல்லாம் புகார்கள் உச்ச நீதிமன்றம் வரை 65 லட்சம் பேர் வாக்காளர் உரிமையே பறிக்கப்பட்டிருப்பதாக வழக்கு சென்றிருக்கிறது.
தமிழ்நாட்டில அதுபோல ஒரு நிலை இல்லாமல், தமிழ்நாடு அரசாங்கம் அரசு அதிகாரிகளை வைத்து எல்லா கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒற்றுமையோடு அதை சிறப்பாக நடைபெற்று முடிக்க அதை செய்திட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு." என்றும் கூறியுள்ளார்.
















