Chiyaan 63: 23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்! - வெள...
புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பினிகளுக்கும், குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைகளில் இருந்து அந்த மருந்துகளை திரும்பப் பெற்று ஆய்வு செய்தபோது, அவை தரமற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதற்காக, சுகாதாரத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

அதற்கு பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அப்போது அங்கு பணியாற்றிய தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NRHM - National Rural Health Mission) மருந்தாளுநர் நடராஜன் என்பவர், மற்ற நிறுவனங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களையும், அதில் குறிப்பிட்டிருந்த தொகைகளையும் விதிகளை மீறி ரகசியமாகப் பார்த்தார்.
அதையடுத்து அவருடைய மனைவி பெயரில் சாய்ராம் மற்றும் பத்மஜோதி ஏஜென்சி என்ற நிறுவனங்களை உருவாக்கி, ரூ.2.4 கோடி குறிப்பிட்டு விண்ணப்பித்தார்.
மற்ற நிறுவனங்கள் ரூ.2.5 மற்றும் அதற்கு மேலான தொகைகளைக் குறிப்பிட்டு டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. குறைவான விலையைக் குறிப்பிட்டிருந்த நடராஜனுக்கு அந்த டெண்டர் கிடைத்தது.
இந்த உண்மைகள் தெரிந்ததும், நடராஜன் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறையின் சிறப்புப் பணி அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மருந்தாளுநர் நடராஜன் உள்ளிட்ட ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடராஜனை கைது செய்த போலீஸார், மாத்திரைகள் கொள்முதல் பிரிவில் இருந்த ரூ.2.4 கோடி மதிப்பிலான தரமற்ற மருந்துகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் அனைத்தும், இந்திய தணிக்கைக் குழுவுக்கும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடராஜன், தரமற்ற மருந்து கொள்முதல் வழக்கில் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மோசடியில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புப் போலீஸார், சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர்கள் டாக்டர் ராமன், டாக்டர் மோகன் குமார், முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் அல்லிராணி, நடராஜனின் மனைவி புனிதா, நந்தகுமார், மோகன் உள்ளிட்ட ஆறு பேரை அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.
அத்துடன், இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகளையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குறி வைத்திருப்பதால், கலக்கத்தில் இருக்கின்றனர் முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்கள்.















