புதுகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4.92 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 1,075 நியாயவிலைக் கடைகளில் மொத்தமுள்ள 4,91,944 குடும்பங்களுக்கும், லெம்பலக்குடி, அழியாநிலை, தோப்புக்கொல்லை ஆகிய இடங்களிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களிலுள்ள 947 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தம் 4,92,891 குடும்பங்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாநகராட்சி 34ஆவது வாா்டுக்குள்பட்ட கோல்டன்நகா், நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்தாா்.
நிகழ்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் சே.கி. குணசேகரன், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் எம். சீதாராமன், மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகம்மது உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
இத்துடன், இலவச வேட்டி, சேலை ஆகியன வரும் ஜன. 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.