புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
புதுகை மீனவா்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவா்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை ஊா்க்காவல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக். 9-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 11 பேரையும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.
இவா்களுடன் 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து இலங்கை ஊா்க்காவல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
இதில், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரவீந்தா் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29), வைத்தியநாதன் (30), குமரேசன் (37), மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சிவகுமாா் (28), கருப்பசாமி (26) ஆகிய 11 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவா்களுடன் சென்றிருந்த விக்னேஷ் (18), மகேஷ் (55), சூரியா (23), சூரியபிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் முதல்முறையாக கைது செய்யப்பட்டதால் விடுவிக்கப்பட்டனா்.